ஆகாய தாமரை, குப்பையால் மீஞ்சூர் வரதர் கோவில் குளம் பாழ்

மீஞ்சூர்:வடகாஞ்சி என அழைக்கப்படும் மீஞ்சூரில், வரதராஜ பெருமாள் கோவில், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். காஞ்சிபுரம் வரதாஜ பெருமாள் கோவில் போன்று, இங்கும், 10 நாட்கள் வைகாசி பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும்.

இக்கோவிலின் பின்புறம், ‛ஆனந்தபுஷ்கரணி' என்ற குளம் பராமரிப்பு இன்றி உள்ளது. குளம் முழுதும் ஆகாயத்தாமரைகள் சூழ்ந்து கிடக்கின்றன. சுற்றியுள்ள குடியிருப்புகளின் கழிவுநீர் தொட்டியாகவும், குப்பை கொட்டும் இடமாகவும் குளம் மாறி உள்ளது.

குளம் பக்தர்களுக்கு மட்டுமின்றி, நிலத்தடி நீர் ஆதாரமாகவும் இருக்கிறது. மீஞ்சூர் பகுதியில் நிலத்தடி நீரில் உவர்ப்புத்தன்மை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற குளங்களை உரிய முறையில் பராமரிப்பதில் அலட்சியம் காட்டப்படுவது சமூக ஆர்வலர்கள் இடையே அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.

குளத்தில் உள்ள ஆகாயத்தாமரை, செடி, கொடிகளை அகற்றி துாய்மைபடுத்தி, குப்பை, கழிவு கொட்டுவதை தவிர்க்கவும், கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement