பொதுப்பணித்துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி: அரசு பஸ் கண்டக்டர் கைது
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு வீருவீட்டில் 3 பட்டதாரி வாலிபர்களுக்கு பொதுப்பணித்துறையில் இளநிலை பொறியாளராக வேலை வாங்கி தருவதாக ரூ.36 லட்சம் மோசடியில் ஈடுபட்ட கணவன்,மனைவி கைது செய்யப்பட்ட நிலையில் கமிஷனுக்கு ஆசை பட்ட அரசு பஸ் கண்டக்கடரையும் நேற்று போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
வத்தலக்குண்டு வீருவீடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்52. இவர் அப்பகுதியில் கடை நடத்துகிறார். 2022ல் இவரது கடைக்கு வத்தலக்குண்டு போக்குவரத்து பணிமனையில் அரசு பஸ் கண்டக்டராக பணியாற்றும் நிலக்கோட்டை பெருமாள் கோவில்பட்டியை
சேர்ந்த மாரிமுத்துசாமி,என்பவர் தினமும் வந்து செல்வார். அப்போது ராஜேந்திரன், பி.எஸ்.சி., படித்த தன் மகன்கள் 2 பேர்,தம்பி மகன் ஒருவருக்கும் அரசு வேலை வேண்டும் என மாரிமுத்துசாமியிடம் கூற அவரும் தனக்கு தெரிந்த ஒருவர் இருக்கிறார். அவரிடம் பணம் கொடுத்தால், அவரது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி,தலைமை செயலக அதிகாரிகள் மூலம் பொதுப்பணித்துறையில் இளநிலை பொறியாளராக பணி வாங்கிவிடலாம் என ஆசை காட்டினார். இதை நம்பிய ராஜேந்தினிடம் மாரிமுத்துசாமி,கரூரை சேர்ந்த குமாரை அறிமுகம் செய்தார். குமார்,தன்னிடம் ரூ.36 லட்சம் தாருங்கள், 6 மாதத்தில் வேலை வாங்கி விடலாம் எனக்கூற ராஜேந்திரனும், சம்மதித்து முதல் தவணை ரூ.15 லட்சமும், 2வது தவணை ரூ.21 லட்சத்தையும் குமாரிடம் கொடுத்தார்.
பணத்தை பெற்று கொண்ட மாரிமுத்துசாமி, குமார் இருவரும் தலைமறைவானார். ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜேந்திரன், திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு
போலீசில் புகாரளிக்க இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, எஸ்.ஐ.,முத்தமிழ் தலைமையிலான போலீசார் இதில் தொடர்புடைய குமார்,பூமகள் இருவரையும் ஜன.3ல் கைது செய்தனர். அரசு பஸ் கண்டக்டர் மாரிமுத்துசாமியை, அவரது வீட்டில் பதுங்கியிருந்தபோது போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் மாரிமுத்துசாமியும், தன உறவினர் மகனுக்காக ரூ.7 லட்சத்தை குமாரிடம் கொடுத்தார். பின் குமார் இதுபோன்று வேறு யாரிடமாவது பணம் வாங்கி தாருங்கள் கமிஷன் தருகிறேன் எனக்கூற இவரும்
ஆசையில் இந்த மோசடியில் சிக்கினார் என போலீசார் தெரிவித்தனர்.