'கம்யூனிட்டி போலீசிங்' இன்றி இனி எந்த பாதுகாப்பும் சாத்தியமில்லை!
குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தண்டனை பெற்றுத் தருவது, அவர்களைத் தொடர்ந்து கண்காணித்து குற்றம் செய்யாமல் தடுப்பது மட்டுமே, குற்றங்களைத் தடுக்கும் வழி என்று கூறிவிட முடியாது.
அதுவும், குற்றவாளி தன்னை நிரபராதி என்று நிரூபிக்க போதிய வாய்ப்பு கொடுக்க வேண்டும்; குற்றம் சிறிதளவும் சந்தேகத்துக்கிடமில்லாமல் நிரூபிக்கப்பட வேண்டும்; சந்தேகத்தின் பலனை குற்றவாளிக்கு வழங்க வேண்டும் என, குற்றவாளிகளுக்கு சாதகமான நம் நீதிமன்ற கோட்பாடுகளை பின்பற்றும் நாம், குற்றங்களை எளிதில் களைந்து விட முடியாது.
பெரும்பாலும் குற்றவாளி களின் இலக்கு என்பது, அவர்களின் குற்றச்செயலை வெற்றிகரமாக முடிக்க ஏதுவாக நிலவும் பாதுகாப்பற்ற சூழ்நிலை மற்றும் பலவீனமான நபர்கள் தான். எனவே அந்த பாதுகாப்பையும், பலவீனத்தையும் கடினப்படுத்துவதன் மூலம் தான், அவர்களின் குற்ற முயற்சியை முறியடிக்க முடியும்.
இதையே, 'டார்கெட் ஹார்டனிங்' என்று குற்றவியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். இதற்கு பயன்படுத்தப்படும் முறை தான், விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
வலியுறுத்தல்
குற்றவாளிகளிடமிருந்து, மக்கள் தங்களைக் காத்துக் கொள்ள, என்னென்ன செயல்களைச் செய்யக்கூடாது; என்னென்ன பாதுகாப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்துவதும், வலியுறுத்துவதும், தேவைப்பட்டால் வற்புறுத்துவதும், சமூக அக்கறையோடு செய்யப்படும் குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் தானே தவிர, தனிமனித சுதந்திரத்தில் குறுக்கிடுவது ஆகாது.
இளைய சமுதாயத்தினரில் கிட்டத்தட்ட இருபது சதவீதம் பேருக்கு மேல், காதலுக்கும், காமத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கின்றனர். பருவவயதில் ஏற்படும் இனக்கவர்ச்சியைக் காதல் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.
காதலை மூலதனப்படுத்தி, கற்பனை வியாபாரிகளால் கவிதையாகவும், வசனமாகவும் விற்கப்பட்ட ஊக்க மொழிகள், இளைஞர்களை உற்சாகப்படுத்தி அவர்களை கனவுலகில் மிதக்க வைத்து விட்டது. காதலிப்பது ஒரு கட்டாயம், கவுரவம் என்ற நிலைக்கு இளைய சமுதாயம் தள்ளப்பட்டு விட்டது.
ஆனால், இந்த வசனங்களையும், கவிதைகளையும், நடித்துக் காட்டும் கதாநாயகர்களில், நாயகியரில் பெரும்பாலானோரின் சொந்த வாழ்க்கை, அலங்கோலமாகத் தான் இருக்கிறது.
திரைப்படத்தில், பத்து குண்டர்களைத் தனியே நின்று சமாளித்து, தன் காதலியைக் காப்பாற்றும் கதாநாயகன் போல், தன் காதலன் தன்னைக் காப்பாற்றுவான் என்று ஒரு பெண் எதிர்பார்ப்பது, நுாறு சதவீதம் சாத்தியமில்லாதது என்பதற்கு, பல்கலைக்கழக வளாகத்தில் நிகழ்ந்த சம்பவமே சான்று.
இதுபோன்று, இருளில் நடந்த பல நிகழ்வுகள், பாதிக்கப்பட்டவர்களின் தயக்கம் மற்றும் அச்சம் காரணமாக, வெளிச்சத்துக்கு வரவில்லை என்பதை, நாம் மறுக்க முடியாது.
சில ஆண்டுகளுக்கு முன், சென்னை, அண்ணா நகர் டவர் பூங்காவில், இருளில் அமர்ந்து அநாகரிகமாக நடந்து கொண்டவர்களை, அப்போதிருந்த துணை ஆணையர், பொதுவெளியில் நிறுத்தி கண்டித்து அனுப்பியதை, ஒரு முன்னாள் காவல்துறை இயக்குநர் உட்பட, பல சமூக ஆர்வலர்கள் கடுமையாக விமரிசித்தனர்.
அந்த நிகழ்வுக்குப் பின் உதவி ஆணையராக பொறுப்பேற்ற நான், 'இருளான இடத்திற்குப் போய் உங்கள் வாழ்க்கையைத் தொலைத்து விடாதீர்கள்' என்று எச்சரிக்கை அறிவிப்பு பலகையை வைக்கச் செய்தேன்; அவ்வப்போது, ரோந்து காவலர்கள் மூலமாக கண்காணித்து, தடுக்கவும் செய்தேன்.
மிகப் பிரபலமான, அமெரிக்க சமூக இயல் வல்லுநர்கள், ஜேம்ஸ் க்யூ வில்சன் மற்றும் ஜியார்ஜ் எல் கெல்லிங் ஆகியோரின், உடைந்த ஜன்னல் தத்துவத்தைப் பாருங்கள்...
ஒரு வீட்டின் உடைந்து போன ஜன்னல், பல நாட்களாக புதுப்பிக்கப்படாமல் அப்படியே விடப்படுமேயானால், அது குற்றவாளிகளுக்கு விடப்படும் அழைப்பு என்கிறது அந்த தத்துவம். இதைப் பின்பற்றி, நியூயார்க் காவல் துறை ஆணையர், வில்லியம் பிராட்டன் மற்றும் நியூயார்க் நகர மேயர் ரூடி கைலியானி வெற்றி பெற்றனர்.
'என் தலைக்கு கவசம் அணிவதும், அணியாமல் இருப்பதும் என் உரிமை' என்றும், 'என் உடல் நலத்தைப் பாதிக்கும் மதுவை அருந்துவதும், அருந்தாமல் இருப்பதும் என் விருப்பம்' என்றும் எப்படி வாதிட முடியாதோ, அப்படித்தான், பெண்கள் தங்களின் சுய பாதுகாப்பில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும், கவனம் செலுத்தவேண்டும் என்று கூறும் அறிவுரைகளை விமரிப்பதும், அலட்சியப்படுத்துவதும்!
ஆலோசனை
அந்த அறிவுரைகள் அனைத்தும், பெண்கள் சமுதாயத்தின் மீதுள்ள அக்கறையில் விடுக்கப்படும் அறைகூவல்கள்.
ஒரு பெண் தன்னை போதிய பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவில்லை என்பதற்காக, அவளை பாலியல் பலத்காரம் செய்தவனின் செயலை நியாயப்படுத்தவோ, அவனுக்கு வழங்கும் தண்டனையில் சலுகை காட்டவோ சட்டம் அனுமதிக்கவில்லை; சமுதாயமும் ஒத்துக்கொள்ளாது. ஆனால் விரும்பத்தகாத ஒரு கொடுமையைத் தடுக்கும் நல்லெண்ணத்தில் கூறும் அறிவுரை மற்றும் ஆலோசனைகளை அலட்சியப்படுத்துதலும், தவறாக விமர்சிப்பதும், சமூக அக்கறை உள்ளவர்கள் செய்யும் செயலல்ல.
ஒரு தனிமனிதனிடம் ஒளிந்து கொண்டிருக்கும் வக்கிர எண்ணத்தை, பார்த்த மாத்திரத்தில் யாராலும் கணித்துவிட முடியாது. அதற்கு ஏற்ற வாய்ப்பும், சூழ்நிலையும் அவனுக்கு வாய்க்கும்போது, அந்த வக்கிரம் வெளிப்படும். அந்த வாய்ப்பையும், சூழ்நிலையையும் அவனுக்கு ஏற்படுத்திக் கொடுக்காமல் இருப்பதில், இந்த சமுதாயத்தில் ஒரு அங்கமாக இருக்கும் நம் ஒவ்வொருவருக்கும் பங்கு இருக்கிறது.
மனசாட்சியுடன் சுய ஒழுக்கத்தைக் கடைபிடித்து வாழ்பவர்கள் குணவான்கள்.
சட்டத்துக்கும் சமுதாயத்திற்கும் பயந்து, தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பவர்கள், சாதாரண மனிதர்கள்.
எதைப்பற்றியும் கவலைப்படாமல், தன் குரூர எண்ணங்களுக்கு வடிவம் கொடுப்பவன், மிருகத்துக்கு ஒப்பான சமூக விரோதி.
இன்று எல்லா பெண்களும், இது போன்ற சிக்கல்களில் சிக்கி வாழ்க்கையைத் தொலைப்பதில்லை; கூர் பற்களுக்கிடையே சுழலும் நாக்கு போல பாதுகாப்பாக தங்களை வைத்துக் கொள்கின்றனர்.
திரைத் துறையில் கூட, இது போன்ற பெண்களும், ஆண்களும் இருக்கத் தான் செய்கின்றனர்.
அரசும், சமுதாயமும் அளிக்கும் பாதுகாப்பு, துணை நிற்கும் பாதுகாப்பு தானே தவிர, முழு உத்திரவாதமானது அல்ல; தனிமனித ஒழுக்கமே, முற்றிலும் பாதுகாப்பானது.
எப்படிச் சொன்னாலும், தவறு செய்துவிட்ட ஆணுக்கு கொடுக்கப்படும் எவ்வளவு பெரிய தண்டனையும், பாதிக்கப்பட்ட பெண், உடலாலும் உள்ளத்தாலும் அடையும் துன்பத்தை முழுதுமாக போக்கி விடாது.
பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான பெண்களை தாழ்வான கண்ணோட்டத்தில் பார்க்கும் இந்த சமுதாயத்தின் நிலை மாறாத காரணத்தினால்தான், பாதிக்கப்படும் பெண்கள் உடனடியாக புகார் கொடுக்கத் தயங்குகின்றனர். அந்தத் தயக்கமே தவறான நோக்கம் கொண்ட ஆண்களுக்குத் துணிவைத் தருகிறது.
ஐயமில்லை
ஒரு ஆணின் வாழ்க்கை சிறப்பாக அமைய முற்பகுதியில் அவனது தாயும் பிற்பகுதியில் அவனது தாரமும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அதனால் தான், 'கடவுளின் பெருமைப்படத்தக்க படைப்பு பெண்' என்றார் ஒரு அறிஞர். இதில் வேடிக்கை என்னவென்றால், பெரும்பாலான பெண்களுக்கு, தங்களின் இந்த பொறுப்பும், அதற்காக அவர்களிடம் மறைந்திருக்கும் ஆற்றலும், அவர்களுக்கே தெரிவதில்லை.
தனிமனிதனின் மனதை மாசுபடுத்துகிற பல விஷயங்களை, பலவகைகளில் கொட்டிக் குவித்துக் கொண்டிருக்கிற இந்த சமுதாயத்தில் நாம் வைக்கும் ஒவ்வொரு அடியையும், கவனத்தோடு வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். சிறு கவனக்குறைவும் நம்மை மிகப்பெரிய துயரத்தில் ஆழ்த்திவிடும் என்பதில் சற்றும் ஐயமில்லை.
இதுதவிர...
காதலனின் துணையோடு கணவனை கூலிப்படை மூலம் கொலை செய்த பெண்.
சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த பெண்.
கள்ளக்காதலுக்காக கணவனை, குழந்தைகளை கொலை செய்த பெண்.
- என்றும் செய்திகள் வெளியாகின்றன.
பெண் சுதந்திரம் என்பதை தவறாகப் புரிந்து கொண்டு தடம் மாறிய வாழ்க்கையை வாழும் பெண்களின் கதைகள் இவை. இத்தகைய பெண்கள், நிம்மதியான வாழ்க்கை வாழ்வதில்லை என்பது மட்டும் நிதர்சனம்.
மாநிலத் தலைநகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஒரு பிரபலமான பல்கலைக் கழகத்தின் மிகப்பெரிய வளாகத்தில், வெகுநாட்களாக நடந்து வந்த மிகக் கொடுமையான ஒரு குற்றம், அந்த பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் பாதுகாப்பு அலுவலர்களில் தொடங்கி, முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் வரை அனைவருக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.
வளாகத்தில் நிலவும் சூழ்நிலையைத் தவறாகப் பயன்படுத்தும் மாணவர்கள் மற்றும் வெளிநபர்கள் பற்றியும், அந்த குற்றத்தை செய்து தற்போது சிக்கிக் கொண்டவர் தவிர, இன்னமும் சிக்காமல் தப்பித்துக் கொண்டிருப்பவர்கள் பற்றி தெரியாமல் இருக்கவும் வாய்ப்பில்லை.
அந்தப் பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை கண்காணித்து, தகவல் சேகரிப்பதற்கென்றே நியமிக்கப்பட்டுள்ள நுண்ணறிவுப் பிரிவு காவல் அலுவலருக்கும், இந்த தகவல் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. தற்போது வெளியாகும் தகவல்கள், காவலர்களில் இருவரே குற்றவாளிக்கு உடந்தையாக இருந்ததாக தெரிவிக்கின்றன.
இதில் யாரும், மற்றவரை சுட்டிக்காட்டி குறை சொல்வதற்கில்லை; அனைவருமே தங்களின் கடமையை மட்டுமல்லாமல், தனிமனிதனின் சமூகப் பொறுப்பையும் புறக்கணித்து விட்டனர் என்பதே உண்மை.
காவல்துறை செயல்பாட்டில், 'கம்யூனிட்டி போலீசிங்' எனப்படும் சமுதாயக் காவல்பணி, அயல்நாடுகளில் செயல்படுத்தப்பட்டு, சிறந்த பயனளிக்கும் முறை என்று கண்டறிந்திருக்கின்றனர். இங்கும் சில அதிகாரிகள், அதைப் பயன்படுத்தி வெற்றி கண்டிருக்கின்றனர். அதன் அடையாளமாக அமைக்கப்பட்டது தான், நகரில் ஆங்காங்கே காணப்படும், 'போலீஸ் பூத்!'
இனி வரும் காலங்களில், பொதுமக்கள் ஒத்துழைப்போடு செயல்படும் சமுதாய காவல் பணியை நடைமுறைப்படுத்தாமல், மக்களைத் திருப்திப்படுத்தும் எந்த காவல் பணியையும் செய்ய முடியாது; குற்றங்களைக் குறைக்கும் விதத்தில், இலக்கை கடினப்படுத்த முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை!
இரண்டு அரசர்களிடையே நடந்த ஒரு போரில், ஒரு அரசனுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாகும் சூழல் நிலவியது. உற்சாகத்துடன் போர்புரிந்து கொண்டிருந்த அந்த அரசனுடைய குதிரையின் கால்களில் பொருத்தப்பட்டிருந்த லாடங்களில் ஒன்றில், ஒரு ஆணி கழன்று விழுந்தது; எனவே, லாடம் தளர்வாக ஆடியது.
இதனால் குதிரையால் சரியாக நிற்கவோ, ஓடவோ முடியவில்லை. ஒரு கட்டத்தில், லாடம் திடீரென்று கழன்று விழுந்ததால், நிலை தடுமாறிய குதிரை, கீழே விழுந்தது. அரசன், குதிரையின் அடியில் சிக்கிக் கொண்டான்; அந்த நேரம் பார்த்து அவனை, கைது செய்தான் எதிரி நாட்டு மன்னன்.
மன்னன் கீழே விழுந்ததால், பெரும் பதற்றமடைந்த படை வீரர்களின் கவனம், சிதறியது. அவர்கள், போர் நடந்து கொண்டிருக்கிறது என்பதையும் மறந்தனர். மன்னனைக் காப்பாற்ற, மன்னனைச் சுற்றிக் குவிந்தனர்.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட எதிரிப் படையினர், ஒரே இடத்தில் குவிந்திருந்த அரசனின் வீரர்களை, சுலபமாக முற்றுகையிட்டு வென்றனர்.
இவ்விதமாக, ஒரு குதிரை லாடத்தின் ஆணி கழன்று விழுந்ததால், ஒரு சாம்ராஜ்யமே சரிந்து வீழ்ந்தது. போருக்கு போகும் முன், குதிரையின் லாடங்களை சரிபார்க்கத் தவறியது, குதிரை பரமரிப்பவன் தவறு. அப்படி ஒரு பராமரிப்பாளனை நம்பி குதிரையில் சவாரி செய்தது, அரசனின் தவறு.
அதுபோலவே, கழன்றுபோன கலாசாரத்தால் சீரழிந்து கொண்டிருக்கும் சமுதாயத்தில், பாலியல் குற்றங்கள் மலிந்து விட்டன.
மா.கருணாநிதி,
காவல்துறை கண்காணிப்பாளர் (ஓய்வு)
அலைபேசி: 9840488111-இ - மெயில்:
spkaruna@gmail.com