திருவாலங்காடு கோவில் சுவரை இடித்து புதிய வழி அறநிலையத்துறை முயற்சிக்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு

திருவாலங்காடு:'திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில், சுற்றுச்சுவரை இடித்து, புதிய வழி அமைக்க கோவில் நிர்வாகம் முயற்சி மேற்கொண்டுள்ளது. இது, ஆகம விதிகளுக்கு எதிரானது' என, பக்தர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதையடுத்து, தொல்லியல் துறையின் ஒப்புதலை பெற உள்ளதாக, கோவிலின் இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடில், வடாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான இது, 1,500 ஆண்டுகள் பழமையானது.

இக்கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

இக்கோவிலின் உள்ளே செல்லவும், வெளியேறவும் ஒரே நுழைவாயில் தான் உள்ளது.

இது, பக்தர்களுக்கு சிரமமாக உள்ளதால், அவர்கள் நலன் கருதி, கோவிலின் பின்புறத்தில் புதிய வழி அமைக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதற்காக, சுற்றுச்சுவரின் ஒருபகுதியை இடிக்கவும் தீர்மானித்தது. இதற்கு, கோவிலின் குருக்களும் இசைவு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, திருத்தணி முருகன் கோவில் இணை ஆணையர் ரமணி மற்றும் மண்டல பொறியாளர் பார்த்திபன், தொல்லியல் துறை அதிகாரிகள் நேற்று கோவிலுக்கு வந்தனர். புதிய வழி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்தனர்.

அப்போது, 'கோவில் சுற்றுச்சுவரை இடித்து, புதிய வழி அமைப்பது ஆகம விதிகளை மீறும் செயல்' என, பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். புதிய வழி அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

திருவாலங்காடை சேர்ந்த லீலா கிருஷ்ணன் கூறுகையில், ''வடாரண்யேஸ்வரர் கோவிலில், 15 ஆண்டுகளுக்கு முன் உள்பிரகாரத்தை இடித்து வழி அமைக்க ஏற்பாடு நடந்தது. அப்போது, ஆலய தலவிருட்சம் எரிந்தது.

''இது, கடவுளுக்கு ஒப்பாகாது. கோவில் நிர்வாகம் புதிய முயற்சியை கைவிட வேண்டும். உள்ளூர் பக்தர்களிடம் கருத்து கேட்க வேண்டும்,'' என்றார்.

திருத்தணி முருகன் கோவில் இணை ஆணையர் ரமணி கூறுகையில், ''கோவிலில் வெளியேறும் வழி இல்லை. எனவே, பின்புறம் வழி அமைக்க ஆலோசித்து வருகிறோம்.

''அறநிலைய துறையின் மண்டல அளவிலான குழு, உயர்மட்ட குழு ஆகியவற்றிடம் கருத்து கேட்கப்படும். அதன்பின், தொல்லியல் துறை ஒப்புதல் கோரப்படும். உரிய ஒப்புதல் கிடைத்த பிறகே வழி அமைக்கப்படும்,'' என்றார்.

Advertisement