சிறுமி வாக்குமூலம் விவகாரம் விசாரணை குழு மாற்றியமைப்பு
சென்னை:பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் வாக்குமூலம் வெளியானது தொடர்பான வழக்குகள் குறித்து விசாரிக்கும் சிறப்பு குழுவை மாற்றியமைத்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, அண்ணா நகரைச் சேர்ந்த 10 வயது சிறுமியை, பக்கத்து வீட்டில் வசிக்கும் வாலிபர், பாலியல் வன்கொடுமை செய்ததாக, சிறுமியின் பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றனர்.
அப்போது, தங்களை இன்ஸ்பெக்டர் தாக்கியதாகவும், வாலிபரின் பெயரை புகாரில் இருந்து நீக்க வற்புறுத்தியதாகவும், பாதிக்கப்பட்ட சிறுமி, அவரது பெற்றோர் பேசிய வீடியோ வெளியானது.
இந்த சம்பவம் தொடர்பாக, தாமாக விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றி உத்தரவிட்டது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தும், சிறப்பு புலனாய்வு குழு அமைத்தும் உத்தரவிட்டது.
இந்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், சி.குமரப்பன் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ்திலக் ஆஜராகி, சிறப்பு புலனாய்வு குழுவை மாற்றியமைக்க கோரினார்.
அதை ஏற்ற நீதிபதிகள், சிறுமியின் வாக்குமூல வீடியோ வெளியானது தொடர்பான இரண்டு வழக்குகள் குறித்து விசாரிக்க, சட்டம் - ஒழுங்கு இணை கமிஷனர் பகெர்லா செபாஸ் கல்யாண் தலைமையில், சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சாந்திதேவி, பிரவீன்குமார் ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்தனர்.
விசாரணை தொடர்பான அறிக்கையை இரண்டு வாரத்துக்குள் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.