5 சதவீதம் உள் ஒதுக்கீடு கோரி மருத்துவ சமூகத்தினர் ஆர்ப்பாட்டம்

சென்னை:எம்.பி.சி., பட்டியலில் இருக்கும் மருத்துவர் சமூகத்திற்கு, ஐந்து சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில், தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாநிலத் தலைவர் நடேசன் தலைமை வகித்தார். எம்.பி.சி., பட்டியலில் உள்ள, மருத்துவர் சமுதாயத்திற்கு, 5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் அல்லது எஸ்.சி., - எஸ்.டி., பிரிவில் சேர்க்க வேண்டும். ஹிந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் பணிபுரியும், முடி திருத்தும் தொழிலாளர்களையும், நாதஸ்வர, தவில் இசைக்கலைஞர்களையும், அரசு ஊழியர்களாக நியமிக்க வேண்டும் என்பது உட்பட, ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில், வி.சி., தலைவர் திருமாவளவன் பேசியதாவது: மருத்துவர் சமுதாயத்தை, எஸ்.சி., பட்டியலுக்கு மாற்றுவது, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. மற்ற கோரிக்கைகளை, மாநில அரசால் செய்ய முடியும். கல்வியிலும், வேலை வாய்ப்பிலும், நமக்கான உரிமையை பெற முடியவில்லை என்றால், நம்மால் முன்னேற முடியாது. மனிதன் மனிதனாக இருக்க வேண்டும் என்றால், அவனை அழகுபடுத்த வேண்டும்.

அதற்கு, இந்த மருத்துவர் சமூகம் இல்லாமல் முடியாது. உங்கள் போராட்டம் வெற்றி பெற துப்பாக்கிகள் வேண்டாம்; சீப்பும், கத்திரிக்கோலும் போதும். தற்போது இருக்கும் அரசு, ஈ.வெ.ராமசாமி வழியில் இயங்கும் அரசு. ஒரு சிலர் அதன் அடிமடியிலேயே கைவைக்க துணிந்து விட்டனர். ஈ.வெ.ராமசாமியை இழிவுபடுத்துவோர், தமிழ் மக்களுக்கும், தமிழகத்திற்கும் எதிரானவர்கள். தமிழகத்தில் பா.ஜ., வளராததற்கு, அவர்தான் காரணம்.

நாம் சமூக நீதி, இட ஒதுக்கீட்டுக்காக போராடுகிறோம் என்றால், நமக்கு ஈ.வெ.ராமசாமி தேவை. அதனால், முடிதிருத்தும் கடைகளில், அவரது படத்தை வைக்க வேண்டும். அவரை அழிக்க நினைப்பவர்கள் யாராக இருந்தாலும், விரட்டி அடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement