கடல் ஆமைகள் உயிரிழப்பு அதிகரிப்பு; மீனவர்களுக்கு கட்டுப்பாடு விதித்தது மீன்வளத் துறை!

4


சென்னை: கடல் ஆமைகள் இறப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதிர்ச்சி அடைந்த மீன்வளத்துறை, விசைப்படகு மீனவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.


சென்னை திருவொற்றியூர் முதல் மாமல்லபுரம் வரை, கடலோரங்களில், கடந்த 20 நாட்களில் மட்டும், 500 கடல் ஆமைகள், கண்கள், கழுத்து வீங்கிய நிலையில், இறந்து கரை ஒதுங்கியுள்ளன. இறந்த கடல் ஆமைகளின், உடலை பரிசோதனை செய்யாமல், புதைத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



'ஆலிவ் ரிட்லி' கடல் ஆமை உள்ளிட்ட, நான்கு வகை கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்குகின்றன. கடல் ஆமைகள், கண்கள், கழுத்து வீங்கிய நிலையில் இறந்து கரை ஒதுங்கி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இந்நிலையில், கோவளம் கடற்கரையில் 25க்கும் மேற்பட்ட ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளன. மெரினா, திருவொற்றியூர், காசிமேடு பகுதிகளும் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கி உள்ளன. சென்னை, செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆமைகளின் எண்ணிக்கை 1000க்கும் மேல் இருக்கும் என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.


ஆமைகள் உயிரிழப்பை தடுக்க, பல்வேறு கட்டுப்பாடுகளை மீன்வளத் துறை விதித்துள்ளது.
மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: 'ட்ராலெர்' எனப்படும் பெரிய விசைப்படகுகளில் பயன்படுத்தப்படும் வலையால், கடல் ஆமைகள் இறப்பு நேர்ந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.


தடைசெய்யப்பட்ட 5 கடல் மைல்களுக்குள் தினசரி ரோந்துப் பணியை மேற்கொள்ளுமாறு எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட மண்டலத்தில் இயங்கும் ஏதேனும் இழுவை படகுகளைக் கண்டால், அவற்றின் எரிபொருள் மானியம் ரத்து செய்யப்படும். மேலும் அவர்களின் மீன்பிடி உரிமமும் ரத்து செய்யப்படும். இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

Advertisement