பயங்கரவாதி தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி!

5


வாஷிங்டன்: மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது.

மஹாராஷ்டிராவின் மும்பையில் 2008 நவ., 26ல், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 166 பேர் உயிரிழந்தனர்; பலர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு, பாக்., வம்சாவளியைச் சேர்ந்த கனடா தொழிலதிபர் தஹாவூர் ராணா, மூளையாகச் செயல்பட்டது தெரியவந்தது.

அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்ட அவன், அந்த நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.
அவனை நாடு கடத்தும் படி, அமெரிக்காவிடம் மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால், தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்த தடை விதிக்கக் கோரி, கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில், தஹாவூர் ராணா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்தது.



இதை எதிர்த்து, அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தில், தஹாவூர் ராணா மேல் முறையீடு செய்தான். இதை சமீபத்தில் விசாரித்த நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
அமெரிக்கா - இந்தியா இடையேயான குற்றவாளிகளை நாடு கடத்தல் ஒப்பந்தத்தின்படி, இந்தியாவுக்கு தஹாவூர் ராணா நாடு கடத்தப்படலாம் என்று அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிர்த்தும், தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்த கூடாது என்றும், ராணா தரப்பில் அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த அமெரிக்க சுப்ரீம் கோர்ட், தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அனுமதி அளித்துள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த இவர் தற்போது அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement