ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகளாகியும் பணம் கொடுத்தே ஓட்டு வாங்குது தி.மு.க., சீமான் குற்றச்சாட்டு..

22

சென்னை: ''ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகளாகியும், பணம் கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய நிலையில் தான் தி.மு.க., உள்ளது,'' என, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

அவர் அளித்த பேட்டி:

தேர்தலில் விலகி இருக்கும், அ.தி.மு.க, - பா.ஜ., கூறும் குற்றச்சாட்டுகளை நான் ஏற்கிறேன். தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்காது; அதிகாரத்தால் கணக்கில்லாத பணத்தை கொட்டி கொடுப்பர் என்பது தெரியும். அதற்காக பயந்து ஒதுங்கினால், அதை சரி செய்வது யார்?

சாக்கடை நாற்றம் எடுக்கிறது என, மூக்கை மூடிக்கொண்டு சென்றால், யார் இறங்கி சுத்தம் செய்வது என்ற கேள்வி உள்ளது. நாங்கள் இறங்கி துாய்மை செய்கிறோம்.

ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் ஆகியும் பணம் கொடுத்து தான், ஓட்டு வாங்க வேண்டிய சூழல் உள்ளது என்றால், அதை கூறி மக்களிடம் பிரசாரம் செய்வேன்.

எந்த அரசியல் தலைவரிடமும், நான் ஆதரவு கேட்பதில்லை. மண்ணின் வளம், மக்களின் நலம் இதை முன்னிறுத்தியதே, எங்கள் கோட்பாடு. மக்களின் ஆதரவை கேட்டு நிற்கிறேன். கட்சிகளின் ஆதரவு வேண்டுமென்றால், நான் ஏன் தனித்து நிற்க வேண்டும்?

பிராபகரனுடன் நான் இருந்த புகைப்பட சர்ச்சை தேர்தல் களத்தில் எதிரொலிக்காது. பிரபாகரனை பற்றி பேசி பேசியே, நான் ஓட்டுக்களை பெற்று காட்டியுள்ளேன். ஈ.வெ.ரா., பேசியதை பேசிக்காட்டி, எனக்கு ஓட்டு விழாமல் தடுத்து காட்ட முடியுமா; அதில் தெரிந்து விடும் யார் வலிமையான தலைவர்கள் என்று.

நாம் தமிழர் கட்சியில் இருந்து ஆட்களை எடுப்பதன் வாயிலாக, தி.மு.க., எவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்பது தெரிகிறது. ஒரு பெரிய ஆல மரத்தில் சிறிய கிளைகளும், இலைகளும் உதிர்வதால், மரத்திற்கு வீழ்ச்சி அல்ல. ஒரு இலை உதிர்ந்தால் மற்றொரு இலை வளரும்; கிளை முறிந்தால், மற்றொரு கிளை வரும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement