திருப்பரங்குன்றம் மலை என்ன கசாப்பு கடையா? மதுரை ஆதினம் கொதிப்பு

22

மதுரை; ''திருப்பரங்குன்றம் மலை என்ன கசாப்பு கடையா. மலையில் ஆட்டை அறுத்து வழிபாடு நடத்தக்கூடாது'' என மதுரை ஆதினம் கூறினார்.

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் வழிபட மதுரை ஆதினத்திற்கு போலீசார் தடைவிதித்தனர். இதனால் அவர் மடத்தில் இருந்து புறப்பட தயாரானவர் ஏமாற்றமடைந்தார். ஆதினத்தின் பாதுகாப்பு கருதிதான் தடை விதிக்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நிருபர்களிடம் மதுரை ஆதினம் கூறியதாவது: நக்கீரர் முருகன் மலை குறித்துதான் பாடியிருக்கிறாரே தவிர, சிக்கந்தர் மலை என்று பாடவில்லை. இலக்கியத்திலும் முருகன் மலை என்றே கூறப்பட்டுள்ளது. மலை மீதுள்ள காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் சிக்கந்தர் பாட்ஷா தர்காவில் ஒற்றுமையாக வழிபாடு நடத்தி வருகின்றனர். மலைக்கு கீழே ஒரு சைவ கோயிலும், மேலே ஒரு சைவ கோயிலும் உள்ள நிலையில் இடையில் உள்ள தர்காவில் வழிபாடு நடத்துவதில் தவறில்லை. ஆனால் அசைவ உணவு கொண்டு சென்று சாப்பிடலாமா? திருப்பரங்குன்றம் மலை என்ன கசாப்பு கடையா? மலையில் ஆட்டை அறுத்து வழிபாடு நடத்தக்கூடாது. மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒரு மதத்தை புண்படுத்தும் விதமாக நடந்து கொள்ளக்கூடாது. வழிபாடு தவிர பிற நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

திருப்பரங்குன்றம் செல்ல ஆதினத்திற்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து ஹிந்து முன்னணி, பா.ஜ.,வினர் ஆதினம் மடம் முன்பு சிறிது நேரம் மறியலில் ஈடுபட்டனர்.

என்னை கொல்ல சதி 'பகீர்'



ஆதினம் நமது நிருபரிடம் கூறியதாவது: சில மாதங்களுக்கு முன் துறவியர் பேரவை அமைப்பில் இருந்து வந்ததாக கூறி ஒருவன் டிரைவர் வேலைக்கு சேர்ந்தான். நானும் அவனது பின்புலத்தை விசாரிக்காமல் சேர்த்துக் கொண்டேன். 2 மாதங்களுக்கு முன் நானும், அவனும் காரில் திருச்சி நோக்கி சென்றபோது, விபத்தை ஏற்படுத்தி என்னை கொல்ல சதி செய்தான். என் தினசரி நடவடிக்கைகள் குறித்து இரவு முழுவதும் யாருடனோ போனில் தகவல் தெரிவித்துக் கொண்டிருப்பான்.


இச்சூழலில்தான் அவன் என்னை கொலை செய்ய முயற்சி செய்தான். உடனடியாக அவனை வேலையை விட்டு அனுப்பி விட்டேன். அவன் தீவிரவாதியாக இருப்பான் என சந்தேகமாக உள்ளது. ஏனெனில் ஹிந்துக்கள் உரிமைகள் குறித்து தொடர்ந்து நான் தைரியமாக பேசி வருவதால் அவன் பணம் பெற்றுக்கொண்டு கொலை செய்ய திட்டமிட்டிருக்கலாம். போலீசில் புகார் கொடுத்தால் சில பெரிய ஆட்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் நான் கொடுக்கவில்லை. இவ்வாறு கூறினார்.

Advertisement