கோரிப்பாளையம் மேம்பால பணிகளில் சுணக்கம்: வழக்குகளால் தாமதமா

மதுரை : மதுரை கோரிப்பாளையம் மேம்பால பணிகளை விரைவுபடுத்த நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோரிப்பாளையம் சந்திப்பில் ரூ.190 கோடி மதிப்பீட்டில் 3 கி.மீ., தொலைவுக்கு மேம்பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. இந்தாண்டு இறுதிக்குள் முடிக்கும் வகையில் வேகம் பிடித்த பணிகள் மழை, வைகையில் தண்ணீர், கட்டுமானத்தில் சரிவு என இடையிடையே தாமதமானது. முக்கிய சந்திப்பு பகுதி என்பதால், அவ்வப்போது அமைச்சர் வேலு, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பணிகளை கண்காணித்து முடுக்கி விட்டனர். இதனால் பாலத்தில், செல்லுார் பாலம் ஸ்டேஷன் ரோடு பகுதி பிரிவில் மேல்தளம் அமைக்கும் பணி நடக்கிறது.

சந்திப்பில் பணிகள் தாமதம்



வைகை ஆற்றுக்குள் துாண்கள் அமைக்கும் பணி, ஆற்றின் தென்கரையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் என பணிகள் விரைவாக நடக்கின்றன. இந்நிலையில் தமுக்கத்தில் துவங்கும் பகுதியில் இருந்து தேவர் சிலை வரை 15 துாண்கள் அமைக்கும் பணி நடக்கிறது. இப்பாலத்தின் மேல்பகுதியில் 12 மீட்டர் அகல ரோடும், கிழக்கு பகுதியில் 7.5 மீட்டர் அகல சர்வீஸ் ரோடு, மேற்கு பகுதியில் 10 மீட்டர் அகலத்தில் தற்போதைய ரோடும் இருக்கும்.

பாலத்தின் மையப்பகுதியில் துாண்கள் அமைக்கும் பணி நடக்கும் நிலையில் சில வாரங்களாக பணிகளில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது. கட்டுமான பணிகளை விரைந்து முடித்தால்தான் திட்டமிட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்க முடியும். சுணக்கத்திற்கு காரணம் இப்பகுதியில் நிலம் கையகப்படுத்தியது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது என தெரியவந்துள்ளது. இது முடிவுக்கு வந்தால்தான் பணிகள் வேகமெடுக்கும்.

இதற்கிடையே மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற கண்காணிப்பு அலுவலர் அருண்தம்புராஜ், ''பொதுமக்கள் நலனுக்காக பல்வேறு முன்னோடி திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. இப்பணிகளில் எவ்வித தொய்வும் இன்றி விரைந்து நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக கோரிப்பாளையம் மேம்பாலம், அப்போலோ சந்திப்பு பாலம் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement