பிரச்சனையும், தீர்வும் :

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் சேதமான ரோடுகள் , கடைகளின் ஆக்கிரமிப்பு, தாறுமாறாக நிறுத்தப்படும் டூவீலர்கள் போன்றவற்றால் கடும் போக்குவரத்து நெருக்கடியில் மக்கள் தினம் சிக்கி தவிக்கின்றனர்.

அருப்புக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து வரும் ரோடு பஜார் பகுதிகள், அண்ணாதுரை சிலை ரோடு ஓரங்களில் கடைகளின் ஆக்கிரமிப்பு, சன் ஷேடுகள் இருப்பதால் வாகனங்கள் சிரமப்பட்டு கடக்க வேண்டி உள்ளது.

ரோடுகளில் டூவீலர்களை தங்கள் இஷ்டத்திற்கு நிறுத்துவதாலும் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக உள்ளது. அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அமுதலிங்கேஸ்வரர் கோயில் சந்திப்பில் உள்ள ரோடு ஓரங்களில் வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் மதுரை, திருச்செந்தூர் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் நகருக்குள் ஒரு வழியாக செல்ல முடியாமல் திணற வேண்டியுள்ளது.

காந்தி நகர் சர்வீஸ் ரோட்டில் லாரிகளை வரிசை கட்டி நிறுத்துவதால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.

இதனால் தூத்துக்குடியில் இருந்து மதுரை செல்லும் அரசு பஸ்கள் இந்தப் பகுதியில் நிற்காமல் நேரடியாக புறவழிச் சாலை வழியாக சென்று விடுகின்றன.

பாலையம்பட்டி முத்தரையர் நகர் பகுதியில் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் அணுகுச்சாலை அமைக்கப்பட்டது.

இதன் வழியாக வாகனங்கள் செல்வது இல்லை. இதனாலும் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

விருதுநகர் ரோடு வழியாக பல கோடி செலவில் மதுரை தூத்துக்குடிக்கு நான்கு வழி சாலையை செல்வதற்கு புறவழிச் சாலை அமைக்கும் பணி ஓராண்டிற்கு மேலாக நடந்து வருகிறது.

ஆனாலும் பணிகள் முடியாததால் விருதுநகர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து வரும் கனரக வாகனங்கள் நகருக்குள் வந்து செல்வதாலும் டிராபிக் ஜாம் ஆகிறது.

பாலசுப்பிரமணியன், தொழில் அதிபர்: அருப்புக்கோட்டை நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. காந்தி நகர் பகுதியில் வழியாகச் செல்லும் திருச்சுழி ரோட்டில் அதிகமான வாகனங்கள் வந்து செல்கின்றன.

இந்த ரோட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, காந்தி நகர் சர்வீஸ் ரோடு வழியாக செம்பட்டி செல்லும் மண் ரோட்டை தார் ரோடு ஆக மாற்றினால், திருச்சுழி ரோட்டில் போக்குவரத்து வெகுவாக குறையும். நகருக்கு இது ஒரு மாற்று பாதியாகவும் இருக்கும்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்



பரமதயாளன், அருப்புக்கோட்டை: நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்றி பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலை துறையினர் பேருக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

முழுமையாக நிரந்தர ஆக்கிரமிப்புகளை அகற்றி நகர் வழியாகச் செல்லும் ரோடுகளை அகலப்படுத்தினால் போக்குவரத்து நெரிசல் குறையும்.

நகருக்குள் வரும் அணுகுச் சாலைகள், புறவழிச் சாலைகளை பணிகளை விரைவில் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் போக்குவரத்து நெரிசல் குறையும்.

கனரக வாகனங்களை நகருக்குள் வராமல் புறவழிச் சாலையில் செல்ல போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-

Advertisement