வில்லியனுார் பைபாஸ் சிக்னலில் விதிமீறும் வாகனங்களால் விபத்து அபாயம் சென்டர் மீடியன் அமைக்கப்படுமா?
வில்லியனுார் : வில்லியனுார் பைபாஸ் கூடப்பாக்கம் நான்கு ரோடு சந்திப்பு சிக்னலில் வில்லியனுார் சாலையில் விதிகளை மீறும் வாகனங்களால் தினசரி விபத்துகள் நடந்தேறி வருகிறது.
வில்லியனுார் நகருக்குள் பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சென்று வந்ததால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக நகரை ஒட்டி பைபாஸ் அமைக்கப்பட்டது.
பைபாசில் மூன்று இடங்களில் நான்கு ரோடு சந்திப்பு பகுதி உள்ளதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனை ஒழுங்குப்படுத்த கடந்த 2018ம் ஆண்டு பிப்., 16ம் தேதி பைபாஸ் சாலை கூடப்பாக்கம் நான்குரோடு சந்திப்பில் தானியங்கி போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டது.
இந்த சிக்னலில், புதுச்சேரி - விழுப்புரம் மார்க்கத்தில் சிகப்பு விளக்கு எரியும்போது, புதுச்சேரியில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் சிக்னலில் சிறிது நேரம் நின்று செல்லாமல், 'பிரிலெப்ட்' சாலையில் திரும்பி வில்லியனுாருக்கு செல்லும் சாலையை கடந்து, விழுப்புரம் சாலைக்கு செல்கின்றனர்.
விதிகளை மீறிச் செல்லும் வாகனங்கள், சிக்னலில் இருந்து வில்லியனுார் நகருக்கு முறையாக செல்லும் வாகனங்களுடன் சிக்கி, தினமும் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி சிக்கனலில் வில்லியனுார் நகருக்கு செல்லும் குறுகலான சாலையை அகலப்படுத்தி, சிக்னலில் இருந்து வில்லியனுார் நகருக்கு செல்லும் சாலையில் குறைந்தபட்சம் 100 மீட்டர் தொலைவிற்காவது நிரந்தரமான சென்டர் மீடியன் அமைத்திட வேண்டும்.