சிவகாசி சிறுகுளம் கண்மாய் கரையில் கிடப்பில் நடைபாதை பூங்கா பணி
சிவகாசி : சிவகாசி சிறுகுளம் கண்மாய் கரையில் நடைபாதை, பூங்கா அமைக்கும் பணி மீண்டும் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
சிவகாசி சிறுகுளம் கண்மாயில் குப்பை கொட்டுவதாலும் கழிவு நீர் கலப்பதாலும் துர்நாற்றம் ஏற்படுத்தியதோடு சுகாதார கேடும் ஏற்பட்டது. மேலும் கண்மாய் கரை முழுவதுமே திறந்த வெளி கழிப்பறையாக மாறியதால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.
எனவே கண்மாயில் குப்பை கொட்டுவதையும் கழிவு நீர் கலப்பதை தடுப்பதற்காகவும் கரையில் இரண்டு மீட்டர் அகலம் 841 மீட்டர் நீளத்திற்கு புதிய நடைபாதை, தெருவிளக்குகள், இருக்கைகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி பூங்கா அமைக்கவும் ரூ 1.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 2022 செப்.ல் பூமி பூஜை போடப்பட்டது.
ஆனால் பணிகள் தொடர்ந்து நடைபெறாமல், பல்வேறு கோரிக்கைகளுக்குப் பிறகு ஒரு ஆண்டுக்குப் பின்னர் கரையில் நடைபாதை அமைக்கும் பணி துவங்கியது. மேலும் வேலி அமைப்பதற்காக கம்பிகள் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் தற்போது இரு மாதமாக பணிகள் கிடப்பில் போடப்பட்டு விட்டது. இதனால் கண்மாய் கரையில் மீண்டும் குப்பை் கொட்டப்படுவதுடன் திறந்தவெளி கழிப்பறையாகவும் மாறிவிட்டது. மேலும் வேலி அமைப்பதற்காக அமைக்கப்பட்ட கம்பிகளில் சிலவற்றை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர்.
தொடர்ந்து பணிகள் கிடப்பில் போடப்படும் பட்சத்தில் நடைபாதை சேதமடைவதோடு அனைத்து கம்பிகளும் திருடு போக வாய்ப்புள்ளது.
எனவே உடனடியாக பூங்கா அமைக்கும் பணியினை துவங்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.