குன்றத்திற்கு அப்துல் சமது, நவாஸ் கனி வந்தது சட்டம் ஒழுங்கை சீர்கெடுக்கும் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு

திருப்பரங்குன்றம் : ''திருப்பரங்குன்றத்திற்கு அப்துல் சமது, நவாஸ் கனி வந்தது சட்டம் ஒழுங்கை சீர்கெடுக்கும் செயல்,' என திருப்பரங்குன்றத்தில் பா.ஜ., சட்டசபை குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., தெரிவித்தார்.


இங்கு மலைமீதுள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் தரிசனம் செய்ய நயினார் நாகேந்திரன், ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் நேற்று வந்தனர்.
.

பின் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: அப்துல் சமது எம்.எல்.ஏ., நவாஸ்கனி எம்.பி., திருப்பரங்குன்றம் மலையில் ஆய்வு செய்துள்ளனர். இது பதட்டமான சூழ்நிலையை உருவாக்கும்.

நான் கூட இங்கே வந்திருக்க மாட்டேன். அவர்கள் வந்ததால் நாங்களும் வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.

பெற்றோர் நமக்கு கற்றுக்கொடுத்தது கடவுள் வழிபாடு. அதை விட்டுக் கொடுக்கவோ மாற்றவோ முடியாது.

மலை மேல் முன்பு அசைவம் சமைத்தது கிடையாது. புதிய பழக்கத்தை ஏற்படுத்த வேண்டாம். இதற்கு முன்பு என்ன பழக்கம் இருந்ததோ அதை கடைபிடிப்பதில் எங்களுக்கு மாற்று கருத்து இல்லை.

அவர்கள் இது எங்கள் மலை, எங்களுக்கு சொந்தம். இப்பழக்கத்தை நாங்கள் நடைமுறைப்படுத்துவோம் என்பது சட்டம் ஒழுங்கை சீர்கெடுக்கும் என்றார்.

காடேஸ்வரா சுப்ரமணியம் கூறுகையில், ''மலை மீதுள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு, நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement