சத்துணவு ஊழியர்களுக்கு விடியல் எப்போது; சங்க மாநில செயலாளர் நுார்ஜஹான் கேள்வி
மதுரை : ''விடியல் ஆட்சி என்று கூறுபவர்களே எங்களுக்கு எப்போது விடியல்,'' என மதுரையில் நடந்த சத்துணவு ஊழியர்களின் உண்ணாவிரதப்போராட்டத்தில் சங்க மாநில செயலாளர் நுார்ஜஹான் பேசினார்.
சத்துணவு ஊழியருக்கான 63 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் மதுரையில் உண்ணாவிரதம் நடந்தது. மாவட்ட தலைவர் மேகலாதேவி தலைமை வகித்தார்.
மாநில செயலாளர் நுார்ஜஹான் பேசியதாவது: ஒழுங்கற்ற கட்டடங்களிலும், அமர்வதற்கு இருக்கைகள் இன்றியும் சத்துணவு ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
ஒரு அமைப்பாளர் 5 முதல் 7 பள்ளிகளில் வேலை செய்கிறோம். 2017 ல் இருந்து காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. 63 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உடன் நிரப்ப வேண்டும்.
1982ல் வேலையில் சேர்ந்தவர்களுக்கு தற்போது தான் பதவி உயர்வு அளித்துள்ளனர். ஓய்வு நேரத்தில் பதவி உயர்வு கொடுப்பதால் பென்ஷனும் மறுக்கப்படுகிறது.
காலை உணவு திட்டத்தை தனியார் அமைப்புக்கு வழங்கியிருப்பது, தொகுப்பு ஊதியம் அளிப்பது போன்ற செயல்களால் அரசு பின்னோக்கி செல்கிறது.
படிப்படியாக எங்களை வேலையில் இருந்து அகற்ற அரசு முயற்சிப்பது போல் உள்ளது.
இருபதாண்டுகளாக பணி உயர்வின்றி தவிக்கிறோம். அதிகமானோர் பி.எட்., முதுநிலை பட்டதாரிகளாக உள்ளனர். சிறப்பு தேர்வு வைத்து அரசு தற்காலிக ஆசிரியர் பணி வழங்குவதாக ஜெயலலிதா முதல்வராக இருந்த போது கூறினார். எந்தப் பணியில் சேர்ந்தோமோ தற்போது வரை அப்பணியிலே தொடர்கிறோம்.
ரூ.2000 பென்ஷன் தொகையை வைத்து இன்றைய காலகட்டத்தில் எப்படி சமாளிப்பது. அரசு ரூ.6750 என உயர்த்தி தர வேண்டும்.
மதிய உணவு திட்டத்தில் அரசு தான் தினமும் முட்டை கொடுக்கிறது. முட்டை உடைந்தோ, அழுகிய நிலையிலோ இருந்தால் சத்துணவு ஊழியர்கள் பொறுப்பாகின்றனர்.
காலை உணவு திட்டத்திற்கு அரசு கொடுக்கும் கவனம், மதிய உணவு திட்டத்திற்கு இல்லை. மூன்றாண்டுகளில் எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை என்றார்.