தேனியில் 'பார்க்கிங்' வசதியின்றி நெரிசலில் தவிக்கும் அவலம் ரோட்டோர ஆக்கிரமிப்புகளால் பொதுமக்கள் அவதி
தேனி: மாவட்டத்தின் தலைநகரான தேனி நகரில் வாகனங்கள் நிறுத்த போதியளவில் பார்க்கிங் வசதி இல்லாததால் முக்கிய ரோடுகள், தெருக்களில் போக்குவரத்திற்கு இடையூறாக கார்கள், டூவீலர்கள் நிறுத்தப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் நெரிசலில் சிக்கி சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அரசு துறைகள் பார்க்கிங் வசதி ஏற்படுத்துவது அவசியமாகும்.
தேனி நகர்பகுதி சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் கட்டமைக்கப்பட்ட நகரமாகும். நகரில் கட்டமைப்பதற்கு பல்வேறு செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டன.
அதனை அமல்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களால் நகரின் பல பகுதி நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. நகரின் முக்கிய பகுதியான நேரு சிலை, மதுரைரோடு, பெரியகுளம் ரோடு, கம்பம்ரோடு உள்ளன. இப் பகுதிகளில் பல்வேறு வணிக நிறுவனங்கள், பூ மார்க்கெட், பஜார் உள்ளிட்டவை செயல்படுகின்றன.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்காக தேனிக்கு வந்து செல்கின்றனர். மேலும், கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை செல்வதால் தேனி எந்த நேரமும் போக்குவரத்து அதிகம் காணப்படுகிறது.
இதனால் நகருக்குள் தினமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வந்து செல்கின்றனர்.
ஆனால் நகரில் வாகனங்களை நிறுத்துவதற்கான போதிய வசதிகளை நகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தவில்லை.
இதனால் வாகன ஓட்டிகள் நினைத்த இடங்களில் டூவீலர்கள், கார்கள் நிறுத்தி செல்கின்றனர். இதனால் மற்ற வாகன ஓட்டிகள் நெரிசலுக்கு உள்ளாவதும், விபத்துக்களில் சிக்குவதும் தொடர்கிறது.
பழைய பஸ் ஸ்டாண்ட், மதுரை ரோடு, பெரியகுளம் ரோடுகளில் 'நோ பார்க்கிங்' பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது பெயரளவில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதில் பல இடங்களில் ஆட்டோக்கள், சரக்கு லாரிகளை இடையூறாக நிறுத்துவதால் தினமும் நெரிலில் மக்கள் தவிக்கின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால் இனி வரும் காலங்களில் தேனி நகர்பகுதி மேலும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்படும்.
ஆம்புலன்ஸ் சிக்குவதை தவிர்க்க வேண்டும்
தினேஷ்குமார், மாணவரணி, அ.தி.மு.க.. தேனி:தேனியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. சில நேரங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட நெரிசலில் சிக்கி கொள்கின்றன.
இதனை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுப்பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும். மேலும் சரக்கு லாரிகள் பீக் ஹவர்ஸ் நேரமான காலை, மாலையில் நகருக்குள் வந்து சரக்குள் இறக்குவதை தவிர்த்து மற்ற நேரங்களில் வந்து சென்றால் பள்ளி, கல்லுாரிகள், வேலைக்கு செல்பவர்கள் சிரமம் இல்லாமல் இருக்கும்.
நகராட்சி வணிக கட்டங்களில் பார்க்கிங் அமைக்க வேண்டும்
கோபிநாத், நகர தலைவர், காங்கிரஸ், தேனி:நகராட்சிக்கு சொந்தமான பல்வேற வணிக வளாகங்கள் இருந்தாலும் அங்கு வரும் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்த எந்த வசதியும் இல்லை.
வேறு இடங்களில் அல்லது ரோட்டில் நிறுத்தும் சூழல் உள்ளது. நகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் பார்க்கிங் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்கு சந்தையில் அமைக்க உள்ள வணிக வளாகத்தில் பார்க்கிங் வசதியுடன் அமைக்க வேண்டும். என்.ஆர்.டி., நகர், சுப்பன்செட்டி தெரு, பெரியகுளம் ரோடு ஆகிய பகுதிகளில் பொது பார்க்கிங் அமைத்தால் தெருக்களில் போக்குவரத்து நெரிசல் குறையும்.