4 மாதமாக திறப்பு விழா காணாத பள்ளி இட நெருக்கடியில் மாணவர்கள் அவதி

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம் பேரீஞ்சம்பாக்கம் ஊராட்சியில், 1924ம் ஆண்டு அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளி துவங்கப்பட்டது. தற்போது, இப்பள்ளியில் 35க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர்.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இப்பள்ளி கட்டடம், போதிய பராமரிப்பு இல்லாததால் பழுதடைந்து காணப்பட்டது. இதையடுத்து, ‛தாட்கோ' வாயிலாக, 1.20 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பள்ளி கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையடுத்து, 2022ம் ஆண்டு பழைய பள்ளி கட்டடம் இடிக்கப்பட்டு, புதிய வகுப்பறை கட்டுமான பணிகள் துவக்கப்பட்டது. இதனால், ஊராட்சி கிராம இ - -சேவை மைய கட்டடத்தில், இரண்டு ஆண்டுகளாக மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பள்ளியின் கட்டுமான பணிகள் கடந்தாண்டு, செப்., மாதம் நிறைவு பெற்றது. தற்போது நான்கு மாதங்கள் கடந்த நிலையில், புதிய பள்ளி வகுப்பறை கட்டடங்கள் திறக்கப்படாமல் உள்ளது.

பணிகள் நிறைவடைந்தும் நான்கு மாதங்களாக, இ- - சேவை மைய கட்டடத்தில் இடநெருக்கடியில் மாணவ - மாணவியர் பயிலும் அவலநிலை நீடித்து வருகிறது. எனவே, புதிய கட்டத்தை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஆதிதிராவிட நலத்துறை அதிகாரி கூறுகையில், 'புதிய பள்ளி வகுப்பறை கட்டடம் இம்மாதம் இறுதியில் காணொலி காட்சி வாயிலாக முதல்வர் திறக்க உள்ளார்' என்றார்.

Advertisement