தடுப்பு இல்லாத கிணற்றால் வடமேல்பாக்கத்தில் அபாயம்

ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியம் ஒரத்துார் கிராமத்தில் இருந்து வடமேல்பாக்கம் வழியே காட்டாங்கொளத்துார், பொத்தேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இச்சாலையில், வடமேல்பாக்கம் பகுதியில் உள்ள காலி மனைனயில், சாலையோரம் தனியாருக்கு சொந்தமான கிணறு உள்ளது.

சாலையோரம் தடுப்புச்சுவர் இல்லாமல் உள்ள கிணற்றால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எதிர்பாராத விதமாக கிணற்றில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

இரவு நேரங்களில் இந்த வழியாக அதிவேகமாக செல்லும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்தால், கிணற்றில் விழுந்து உயிர்ச்சேதம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

அதேபோல், காலை - மாலை நேரங்களில் இவ்வழியாக பள்ளிக்கு நடந்து செல்லும் மாணவர்கள், விளையாட்டாக கிணறு அருகே வரும் போது, தவறி விழும் சூழல் உள்ளது. கால்நடைகள் கிணற்றின் அருகே சென்று புற்களை மேய்வதற்கு வரும்போது தவறி விழும் அபாயம் உள்ளது.

எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன், கிணற்றுக்கு உடனடியாக தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement