வாகனங்கள் திரும்பும் சாலை அகலப்படுத்த கோரிக்கை
திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவில் கிழக்கு மாடவீதி வழியாக நெம்மேலி செல்லும் இ.சி.ஆர்., சாலை உள்ளது.
இச்சாலை பழைய மாமல்லபுரம் சாலையையும், கிழக்கு கடற்கரை சாலையையும் இணைக்கும் வகையில், 3 கிமீ. தூரம் உள்ளது.
இச்சாலையை பயன்படுத்தி திருப்போரூரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், வேளாண் அலுவலகம், வட்டார கல்வி அலுவலகம், காவல் நிலையம் உள்பட பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு கானத்துார், முட்டுக்காடு, கோவளம், செம்மஞ்சேரி, திருவிடந்தை உள்ளிட்ட கடற்கரையை ஒட்டிய கிராம மக்கள் வந்து செல்கின்றனர்.
அதேபோல் திருப்போரூர், ஆலத்துார், தண்டலம், உள்பட பல்வேறு கிராமங்களில் இருந்து நெம்மேலியில் செயல்படும் அரசு கலைக்கல்லுாரிக்கு தினமும் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் வந்து செல்கின்றனர்.
மேலும், இச்சாலையில், தனியார் உப்பு தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏராளமான கனராக வாகனங்கள் சென்று வருகின்றன.
இவ்வாறு செல்லும் வாகனங்கள் திருப்போரூர் கந்தசுவாமி கோவில் கிழக்கு மாடவீதி மற்றும் நெம்மேலி செல்லும் இ.சி.ஆர்., இணைப்பு சாலை வழியாக திரும்பிசெல்கின்றன.
இச்சாலை, ஏற்கனவே குறுகியதாக இருக்கும் நிலையில், இவ்வழியே வரும் வாகனங்கள் திரும்பி செல்வதில் இடையூறு ஏற்படுகிறது. கோவில் விழா மற்றும் முகூர்த்த நாட்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே சாலையை அகலப்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.