திட்டமிட்டு கட்டாத மூடுகால்வாயால் கவுல்பஜாரில் கழிவுநீர் தேங்கி பாதிப்பு

பம்மல்:தாம்பரம் அருகே, பம்மல் ஸ்டேட் பாங்க் காலனி, அதை சுற்றியுள்ள பகுதிகளில், மழைக்காலத்தில் வெளியேறும் மழைநீர், ஆண்டாள் நகர், மூவர் நகர், கவுல்பஜார் ஊராட்சி குடியிருப்பு வழியாக அடையாறு ஆற்றில் கலக்கும்.

மழை அதிகமாக பெய்தால், இப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும். ஆண்டுதோறும் இப்பிரச்னை தொடர்வதால், கால்வாய் கட்டி, குடியிருப்பு பகுதியில் வெள்ளம் தேங்காத வகையில், அடையாறு ஆற்றுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து, முதற்கட்டமாக, பம்மல் ஸ்டேட் பாங்க் காலனியில் இருந்து ஆண்டாள் நகர் வழியாக மூவர் நகர் வரை, 2,000 அடி துாரத்திற்கு, 3 கோடி ரூபாய் செலவிலும், இரண்டாம் கட்டமாக, மூவர் நகர் முதல் அடையாறு ஆறு வரை 3,000 அடி துாரத்திற்கு, 4.15 கோடி ரூபாய் செலவிலும் மூடுகால்வாய் கட்டப்பட்டுள்ளது.

இக்கால்வாயை அடையாறு ஆறு வரை கட்டி முடிக்காமல் பாதியில் நிறுத்தியதால், பகுதிவாசிகள் சிரமப்படுகின்றனர்.

பகுதிவாசிகள் கூறியதாவது:

மூடுகால்வாயை அடையாறு ஆறு வரை எடுத்து சென்று, முழுமையாக முடிக்காமல், கவுல்பஜார் காவல் உதவி மையத்தோடு அப்படியே நிறுத்திவிட்டனர்.

அங்கிருந்து அடையாறு ஆறு வரை, ஒரு கி.மீட்டருக்கு 2 அடியில் பழைய கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் குறுகியதாக இருப்பதால், அதிகப்படியான தண்ணீர் செல்லும்போது கால்வாயில் இருந்து மழைநீர் வெளியேறி குடியிருப்புகளை சூழ்கிறது.

மூடுகால்வாயை திட்டமிடாமல் கட்டியதாலே, பொழிச்சலுார் ஊராட்சி, ராமலிங்கம் நகர், ராமானுஜர் தெரு மற்றும் கவுல்பஜார் ஊராட்சி அப்துல்கலாம் நகர் பகுதிகளில் காலி மனைகளில், குளம்போல் கழிவுநீர் தேங்கியுள்ளது.

அதனால் துர்நாற்றம், கொசு தொல்லை மற்றும் நிலத்தடி நீர் பாதிப்பு போன்ற பிரச்னை ஏற்படுகிறது.

மூடுகால்வாய் நிரம்பி, கழிவுநீர் பின்நோக்கி சென்று, உட்பகுதி கால்வாய்கள் வழியாக வெளியேறி, சாலைகளிலும் தேங்கிறது.

நெடுஞ்சாலைத் துறை உயர் அதிகாரிகள், இப்பகுதியை நேரில் ஆய்வு செய்து, இப்பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement