கலெக்டர் ஆபிசிலிருந்து 8 கி.மீ., துாரம் இலவச பட்டா இல்லை: கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் தகவல்
' கலெக்டர் ஆபிசிலிருந்து, 8 கி.மீ., துாரம் வரை இலவச வீட்டுமனை பட்டா வழங்க சாத்திய கூறுகள் இல்லை. இருப்பினும் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது,'' என செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில், கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், புனிததோமையார்மலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 359 ஊராட்சிகள் உள்ளன. இங்கு, குடியரசு தின விழா சிறப்பு கிராமசைபை கூட்டம், அனைத்து ஊராட்சிகளிலும், நேற்று, நடந்தது.
செங்கல்பட்டு அடுத்த பழவேலி ஊராட்சியில், கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் மாலா தலைமையில் நடந்தது.
கலெக்டர் அருண்ராஜ் பங்கேற்று பேசினார்.
மாவட்டத்தில், கோவளம் ஊராட்சி முன்மதிரியாக திகழ்கிறது. இந்த ஊராட்சியில், 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக் கப்படுகிறது. இதேபோன்று, அனைத்து ஊராட்சிகளும் முன்வரவேண்டும்.
கலெக்டர் அலுவலகத்தில் இருந்து 8 கி.மீ., துாரம் உள்ளவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கொடுக்க முடியாத சூழல் உள்ளது.
இங்குள்ளவர்களுக்கு பட்டா வழங்க, அரசுக்கு கருத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன், பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். செங்கல்பட்டு நகரின் அருகாமையில், பழவேலி ஊராட்சி உள்ளதால், நகராட்சி பகுதியில் சேரும் வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு, கலெக்டர் பேசினார்.
அதன்பின், தொழுநோய் விழிப்புணர்வு மற்றும் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு உறுதிமொழியை கிராமவாசிகள் எடுத்துக்கொண்டனர். சப்- கலெக்டர் நாராணயசர்மா உள்ளிட்ட அனைத்துதுறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
* பவுஞ்சூர் அடுத்த நெல்வாய்பாளையம் ஊராட்சியில் 1000 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாயமே இப்பகுதி மக்களின் பிரதான தொழிலாகும்.
நெல், மணிலா,தர்பூசணி உள்ளிட்ட பயிர்கள் பருவத்திற்கு ஏற்றது போல விவசாயம் செய்யப்படுகிறது.
தற்போது சம்பா பருவத்தில் 400 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தற்போது புதிய கல்குவாரி துவங்குவதற்கான பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
கல்குவாரி அமைந்தால் நிலத்தடி நீர் பாதிப்படைந்து விவசாயம் மற்றும் கால்நடைகள் பெருதும் பாதிக்க வாய்ப்பு உள்ளதால், கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று நடந்த கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* அச்சிறுபாக்கம், மதுராந்தகம் ஒன்றியத்திற்குபட்ட ஊராட்சிகளில், நேற்று காலை அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது.
வேடந்தாங்கல் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் வேதாச்சலம் தலைமையில் கூட்டம் நடந்தது.
அதில், திறந்தவெளியில் மலம் கழித்தலற்ற நிலையில் திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை வசதிகளை கொண்ட வேடந்தாங்கல் ஊராட்சி துாய்மையில் உயரும் ஊராட்சி என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், பார்வைக்கு துாய்மையாக விளங்குவதால் வேடந்தாங்கல் ஊராட்சி முன்மாதிரி ஊராட்சியாக தீர்மானம் அறிவிக்கப்பட்டது. மதுராந்தகம் அடுத்த அருங்குணம் ஊராட்சி மன்ற தலைவர் யோகேஷ் தலைமையில் கூட்டம் நடந்தது. மதுராந்தகம் ஒன்றிய குழு தலைவர் கீதா மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் பங்கேற்றனர்.
* மாமல்லபுரம் அடுத்த, கடம்பாடி ஊராட்சி கிராமசபை கூட்டம், தலைவர் தேன்மொழி தலைமையில் நடந்தது. ஊராட்சி, புதுச்சேரி சாலை பகுதியில் உள்ள தனியார் உப்பளத்தால், குடிநீர், நிலத்தடிநீர் பாதிக்கப்படுவதால், உப்பளத்தை மூடவேண்டும், தனியார் வீட்டுமனை வளாகத்தில் ஒதுக்கப்பட்ட ஊராட்சி பொதுதிறவிட பகுதியில் உள்ள மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டன.
* கல்பாக்கம், சதுரங்கப்பட்டினம் ஊராட்சி கிராமசபை கூட்டம், தலைவர் ரேவதி தலைமையில் நடந்தது. இங்குள்ள மேம்படுத்தப்பட்ட வட்டார ஆரம்ப சுகாதார மையத்தில், டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள் பற்றாக்குறையாக உள்ளதால், தேவைக்கேற்ப நியமிக்கவேண்டும், பொதுமக்களுக்கு அரசு நலதிட்ட வீடுகள் அதிகளவில் ஒதுக்கவேண்டும், குடிநீர் மேம்பாட்டு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தீர்மானம் இயற்றப்பட்டது.
* காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஆப்பூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் குமாரசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு தி.மு.க., எம்.எல்.ஏ., வரலட்சுமி பங்கேற்றார்.
கூட்டத்தில் குடிநீர், மழைநீர் வடிகால்வாய்,மகளிர் பேருந்து உள்ளிட்ட அடிப்படை தேவைகள் உட்பட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
* கொண்டமங்கலம், சிங்கபெருமாள் கோவில், அஞ்சூர் உள்ளிட்ட ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் கிராம மக்கள் அடிப்படை வசதிகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இதில் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராம மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
* செங்கல்பட்டு அடுத்த, ஆலப்பாக்கம் ஊராட்சி சிறப்பு கிராமசபை கூட்டம் தலைவர் பரிமளா தலைமையில், மலையபடி வேண்பாக்கம் நடுநிலை பள்ளி வாளகத்தில் நடந்தது. ஒன்றிய கவுன்சிலர் நிந்திமதி, வனக்குழு தலைவர் திருமலை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். பாரதிபுரம் பகுதி மக்களுக்கு, மேல் நிலை நீர்தேக்க தொட்டி கட்டித்தர வேண்டும். குளங்களை துார்வாரி சீரமைக்க வேண்டும். சமுதாய கூடம் கட்டிதரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கிராமவாசிகள் முன் வைத்தனர். இந்த கோரிக்கைகளை தீர்மானம் நிறைவேற்றி, கலெக்டருக்கு அனுப்பி வைத்தனர்.
* ஊரப்பாக்கம், வண்டலுார் , மண்ணிவாக்கம், காரணை புதுச்சேரி, நெடுங்குன்றம் உள்ளிட்ட ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் பங்கேற்று சாலை, தெரு விளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டி கோரிக்கை வைத்தனர்.
* திருப்போரூர் ஒன்றியம் முட்டுக்காடு முதல் நிலை ஊராட்சி ஏகாட்டூரில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் கழிவுநீர் கால்வாய் அமைத்தல், இளைஞர்களை ஊக்கப்படுத்த விளையாட்டு மைதானம் அமைத்தல், நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் இருந்து மீட்டெடுத்தல், அங்கன்வாடி கட்டிடத்திற்கு சுற்றுச்சுவர் அமைத்தல், உள்ளிட்ட கோரிக்கைகளை ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதாவிடம் பொதுமக்கள் வழங்கினர். நெல்லிகுப்பம் ஊராட்சியில் தலைவர் பார்த்தசாரதி தலைமயில் நடந்த கிராம சபை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- நமது நிருபர் குழு-