கிராம சபையில் மனு அளித்தவரை ஒருமையில் திட்டிய துணை தலைவர்

கோவிலம்பாக்கம்,:குடியரசு தினவிழாவை முன்னிட்டு, புனித தோமையார் மலை ஒன்றியம், கோவிலம்பாக்கம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில், கோவிலம்பாக்கம் 6வது தெருவில் மழைநீர் வடிகால்வாயுடன் சாலை அமைத்தல், விடுபட்ட சாலை அமைத்தல், தடையில்லா குடிநீர், தெருவிளக்கு அதிகரிப்பு, வீடுதோறும் குப்பை சேகரித்தல் போன்ற அடிப்படை வசதிகளுக்கு 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் ஒலிபெருக்கி வசதி சரிவர செய்யாததால், தீர்மானங்கள் வாசிப்பு, பொதுமக்களின் காதுகளில் விழவில்லை.

மனு கொடுக்க வந்த தேவராஜ் வேலு என்பவரை, துணை தலைவர் மணிமாறன் ஒருமையில் பேசியதோடு மட்டுமல்லாமல், மிரட்டல் விடுத்து அவரை கூட்டத்திலிருந்து வெளியேற்றினார்.

இதுகுறித்து தேவராஜ் வேலு கூறியதாவது:

கோவிலம்பாக்கம் ஊராட்சி 2வது வார்டு, 2வது தெருவில், நேதாஜி நகர் - மாங்களியம்மன் சாலையின் குறுக்கில், மழைநீர் வடிகால்வாய் கல்வெர்ட் சாலை மட்டத்தைவிட 2 அடி உயரத்தில் உள்ளது.

இதனால், இப்பகுதியில் அடிக்கடி வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்திற்குள்ளாகின்றனர். இதுகுறித்து பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இது சம்பந்தமான என் மனுவை பெறாமலேயே என்னிடம், துணை தலைவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒருமையில் பேசி, கூட்டத்தில் இருந்து மிரட்டி வெளியேற்றினார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மணிமாறன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தண்டலம் ஊராட்சி

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் ஒன்றியம், தண்டலம் ஊராட்சியில் கலெக்டர் கலைச்செல்வி தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக சிறு, குறு தொழிற்துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்று, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது, திறந்தவெளியில் லாரிகளில் கழிவுநீர் கொட்டுவதாக பொதுமக்கள் புகார் அளித்தனர். மேலும், சாலை வசதி, மின்விளக்கு வசதி குறித்து கூறிய புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, அமைச்சர் தெரிவித்தார்.

Advertisement