இணை சார் பதிவாளரிடம் ரூ.3.98 லட்சம் பறிமுதல்
ஊட்டி:ஊட்டியில், இணை சார் பதிவாளரிடம் கணக்கில் வராத, 3.98 லட்சம் ரூபாய் பணத்தை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் ஷாஜகான், 55, என்பவர், பொறுப்பு இணை சார் பதிவாளராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை, இவர் பணி முடித்து, திருப்பூருக்கு வாடகை வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது, ஊட்டி சேரிங்கிராஸ் அருகே, கோத்தகிரி சாலையில், லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு, தேர்தல் தாசில்தார் சீனிவாசன், எஸ்.ஐ.,க்கள் சக்தி, சாதன பிரியா மற்றும் ரங்கநாதன் ஆகியோர் அந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில், 3.98 லட்சம் ரூபாய் கணக்கில் வராத பணம் இருந்துள்ளது. அதை பறிமுதல் செய்த போலீசார், ஷாஜகானை அவரது அலுவலகத்துக்கு மீண்டும் அழைத்து வந்து இரவு வரை விசாரணை நடத்தினர்.
டி.எஸ்.பி., ஜெயகுமார் கூறுகையில், ''ஊட்டி இணை சார் பதிவாளர் ஷாஜகான், திருப்பூருக்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தகவலின்படி, அவர் வாகனத்தை சோதனையிட்ட போது, கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது.
மற்ற விபரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்,'' என்றார்.