அறக்கட்டளை மோசடி: மலைவாழ் மக்களிடம் கூட்டம் நடத்தி ஏமாற்றியது அம்பலம்
சேலம்,:சேலம், அம்மாப்பேட்டையில், அன்னை தெரசா அறக்கட்டளை நடத்தி, கவர்ச்சி விளம்பரங்களை செய்து பணம் முதலீடு பெற்று மோசடி செய்யப்பட்டது. இதில், 12.65 கோடி ரூபாய், 2.5 கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளி பொருட்கள், நில ஆவணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து அறக்கட்டளை தலைவி விஜயபானு உள்பட, 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் பாதிக்கப்பட்ட மக்கள், சேலம் பெருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு, தொடர்ந்து புகார்களை அளித்து வருகின்றனர்.
போலீசார் கூறியதாவது:
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள மலைக்கிராமங்களில் சிறப்பு கூட்டம் நடத்தி, அந்த மக்களிடம் ஆசை வார்த்தை கூறி லட்சக்கணக்கில் முதலீடு பெற்று மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக விஜயபானு உள்ளிட்ட நிர்வாகிகள், ஏற்காடு, கொல்லிமலை மலைவாழ் மக்கள் மத்தியில் கூட்டங்கள் நடத்தியுள்ளனர்.
முன்னதாக அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை கொடுத்து உதவி நன்கு பழகியுள்ளனர். தொடர்ந்து, 'எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால், 3 மடங்காக திருப்பி தருவோம்' என கூறியுள்ளனர். அதை நம்பிய மலைவாழ் மக்கள், அறக்கட்டளையில் பல லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர். ஏற்காடு, கொல்லிமலை, ராசிபுரத்தில் மட்டும், 100க்கும் மேற்பட்டோர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தற்போது மலைவாழ் மக்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.