திறந்து மூன்றே மாதத்தில் பள்ளி கட்டடம் விரிசல்

உத்திரமேரூர், உத்திரமேரூர் ஒன்றியம் காரணை ஊராட்சி, வயலுார் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, அப்பகுதியைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட மாணவ -- மாணவியர் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் வகுப்பறை கட்டடம் பழுதடைந்து இருந்ததால், புதிய கட்டடம் கட்ட பெற்றோர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன்படி, 2021 -- 2022ம் நிதியாண்டில், பிரதமமந்திரி ஆதர்ஷ் கிராம யோஜனா திட்டத்தின் கீழ், 18.79 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த கட்டடம், மூன்று மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டது.

இந்நிலையில், கட்டடத்தில் அங்காங்கே விரிசல்ஏற்பட்டு வருகிறது. இந்த விரிசலின் வழியே, மழை பெய்யும் நேரத்தில் மழைநீர் கட்டடத்தில் கசிகிறது. இதனால், கட்டடத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாக உள்ளது.

இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில், பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, பள்ளி கட்டடத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை, துறை சார்ந்த அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement