ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாற்றுத்திறனாளிகள் வாழ்வை மாற்ற முயற்சி துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பேச்சு
சென்னை:''வளர்ச்சி அடைந்த பாரதம், மாற்றுத்திறனாளிகள் பங்களிப்பு இல்லாமல் நிறைவாகாது. அவர்களின் தேவைகளை நாம் யாரும் சமுதாயத்தில் ஒதுக்கி விட முடியாது,'' என, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தெரிவித்தார்.
தேசிய மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டு நிறுவனம், எஸ்.இ.டி.பி., தொண்டு நிறுவனம், சென்னை சேட்னா அறக்கட்டளை, வித்யாசாகர் நிறுவனம் சார்பில், செவித்திறன், - கண்பார்வை குறைபாடு உள்ள, மாற்றுத்திறனாளிகளுக்கான, 3-வது தேசிய மாநாடு, சென்னை முட்டுக்காட்டில் நேற்று நடந்தது.
இதில், துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பங்கேற்று பேசியதாவது:
செவித்திறன் மற்றும் கண்பார்வை குறைபாடு இருந்தாலும், இவர்களிடம் ஏராளமான திறமைகள் குவிந்துள்ளன. இவர்களை ஊக்குவித்தால் மட்டும் போதும். மாற்றுத்திறனாளிகள் பிறக்கும் போதே ஆசீர்வதிக்கப் பட்டவர்கள்.
நம் நாட்டில் சிறந்த திறமை உள்ள மாற்றுத்திறனாளிகள் பலர் இருக்கின்றனர். மாற்று திறனாளிகளின் திறன்களை கண்டறிந்து, அவர்களின் கனவை சாத்தியமாக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
வளர்ச்சி அடைந்த பாரதம், இவர்களின் பங்களிப்பு இல்லாமல் நிறைவாகாது.
மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை, நாம் யாரும் சமுதாயத்தில் ஒதுக்கி விடக்கூடாது.
பல்வேறு இக்கட்டான சூழல்களை, மாற்றுத்திறனாளிகள் திறம்பட கையாண்டு வருகின்றனர். அந்த வகையில் பாரா ஒலிம்பிக்ஸ் போட்டிகளில், மாற்று திறனாளிகள் சிறப்பாக பங்களித்து வருகின்றனர்.
மாற்றுத்திறனாளிகளின் நலனில், பிரதமர் மோடி மிகுந்த அக்கறை கொண்டவராக விளங்கி வருகிறார். அவர் பொறுப்பேற்றதில் இருந்து, மாற்றுத் திறனாளிகள் வளர்ச்சியில், பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மாற்றுத்திறனாளிகளின் வாழ்வை மாற்ற முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார். 'அம்மாவின் பெயரில் ஒரு மரம்' என்ற திட்டத்தை முன்னிலைப்படுத்தி, முட்டுக்காடு தேசிய நிறுவன வளாகத்தில், துணை ஜனாதிபதி மரக்கன்றுகள் நட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.