ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வெற்றி: இலங்கை ஏமாற்றம்

காலே: முதல் டெஸ்டில் அசத்திய ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ், 242 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சொந்த மண்ணில் இலங்கை அணி ஏமாற்றியது.

இலங்கை சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், காலேயில் நடந்தது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 654/6 ('டிக்ளேர்') ரன் குவித்தது. மழையால் பாதிக்கப்பட்ட 3ம் நாள் முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 136/5 ரன் எடுத்திருந்தது. சண்டிமால் (63), குசால் மெண்டிஸ் (10) அவுட்டாகாமல் இருந்தனர்.
நான்காம் நாள் ஆட்டத்தில் லியான் 'சுழலில்' தினேஷ் சண்டிமால் (72) சிக்கினார். குனேமன் பந்தில் குசால் மெண்டிஸ் (21), பிரபாத் ஜெயசூர்யா (0), ஜெப்ரி வான்டர்சே (4) அவுட்டாகினர். இலங்கை அணி முதல் இன்னிங்சில் 165 ரன்னுக்கு சுருண்டு 'பாலோ-ஆன்' பெற்றது. ஆஸ்திரேலியா சார்பில் குனேமன் 5, லியான் 3 விக்கெட் சாய்த்தனர்.


பின் 2வது இன்னிங்சை துவக்கிய இலங்கை அணிக்கு சண்டிமால் (31), மாத்யூஸ் (41), கமிந்து மெண்டிஸ் (32), கேப்டன் தனஞ்செயா டி சில்வா (39), குசால் மெண்டிஸ் (34) ஓரளவு கைகொடுத்தனர். பொறுப்பாக ஆடிய ஜெப்ரி வான்டர்சே (53) அரைசதம் கடந்தார். இலங்கை அணி 2வது இன்னிங்சில் 247 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி இன்னிங்ஸ் தோல்வியடைந்தது. ஆஸ்திரேலியா சார்பில் குனேமன், லியான் தலா 4 விக்கெட் கைப்பற்றினர்.

ஆட்ட நாயகன் விருதை ஆஸ்திரேலியாவின் கவாஜா வென்றார். ஆஸ்திரேலிய அணி 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது டெஸ்ட், பிப். 6ல் காலேயில் துவங்குகிறது.



மோசமான தோல்வி


ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்த இலங்கை அணி, டெஸ்ட் அரங்கில் தனது மோசமான தோல்வியை (இன்னிங்ஸ், 242 ரன் வித்தியாசம்) பதிவு செய்தது. இதற்கு முன், 2017ல் நாக்பூரில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் இன்னிங்ஸ், 239 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

Advertisement