சானடோரியத்தில் மாவட்ட மருத்துவமனை மூன்று மாதங்களில் பணியை முடிக்க தீவிரம்

சென்னை, குரோம்பேட்டையில், ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டி, அரசு தாலுகா மருத்துவமனை இயங்கி வருகிறது.

தென்சென்னையில் உள்ள ஒரே அரசு மருத்துவமனை இதுவாகும். இதைவிட்டால், செங்கல்பட்டு அல்லது சென்னைக்கு தான் செல்ல வேண்டும்.

இம்மருத்துவமனையை, மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனரகம், கடந்த 2021, அக்டோபரில் அனுமதி வழங்கியது.

தொடர்ந்து, இம்மருத்துவமனையை நவீனமயமாக்க, 110 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டது.

இதற்காக, தாம்பரம் சானடோரியத்தில், சுகாதாரத் துறைக்கு சொந்தமான இடத்தில், ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.

கடந்த 2023, பிப்ரவரி 28ல், முதல்வர் ஸ்டாலின், இதற்கு அடிக்கல் நாட்டினார். சுற்றுச்சூழல் மற்றும் தொல்லியல் துறையின் தடையில்லா சான்று கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால், 2023, ஆகஸ்ட் மாதம் பணிகள் துவங்கின.

தற்போது, 80 சதவீத பணிகள் முடிந்து விட்டன. உட்பகுதியில் சில இடங்களில் வர்ணம் பூசுதல், வெளியே வளைவு கட்டுதல் உள்ளிட்ட சில பணிகள் மட்டுமே உள்ளன.

அந்தப் பணிகளும் வேகமாக செய்யப்பட்டு, மூன்று மாதங்களில் கட்டடம் முழுமையாக முடிக்கப்பட்டு, அரசிடம் ஒப்படைக்கப்படும் என தெரிகிறது.

அதன்பின், முதல்வர் ஸ்டாலின், இம்மருத்துவமனையை திறந்து வைப்பார்.இம்மருத்துவமனை பயன்பாட்டிற்கு வந்தால், அனைத்து விதமான சிகிச்சைகளும் இங்கேயே கிடைக்கும். அதனால், நோயாளிகள் செங்கல்பட்டு, சென்னைக்கு செல்வது குறையும்.

Advertisement