வீட்டு பத்திரத்தை வைத்து வங்கிக்கடன் பெற்றுத்தருவதாக ரூ.1.50 கோடி மோசடி
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரியில் வங்கிக்கடன் வாங்கி தருவதாக கூறி, பெண்ணிடம் வீட்டுப்பத்திரத்தை வாங்கி, 1.50 கோடி ரூபாய் வங்கி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டவரை, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி, மேல்சோமார்பேட்டையை ராஜேஸ்வரி 42. இவருக்கு சொந்தமான இடத்தில், வீடு, கடைகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். கடன் பிரச்னையால் இடத்தை விற்க முயன்றுள்ளார்.
அப்போது, கிருஷ்ணகிரி அடுத்த கட்டிகானப்பள்ளியை சேர்ந்த அரசு துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ்குமார், சேலத்தை சேர்ந்த மோகன், சிவசக்தி ஆகியோர், வீட்டை விற்க வேண்டாம், வங்கியில் நாங்கள் கடன் பெற்று தருகிறோம் எனக்கூறி, திண்டுக்கல் மாவட்டம் கோதையத்தை சேர்ந்த மணிவண்ணன் மற்றும் அவரது மைத்துனர் சிவராஜ் என்பவரை அறிமுகப்படுத்தி உள்ளனர்.
இருவரும், ராஜேஸ்வரியின் வீட்டை பார்வையிட்டனர். பிறகு, 'உங்கள் பெயரில் வங்கியில் கடன் அதிகளவு வாங்க முடியாது. திண்டுக்கலில் தனியார் நிறுவனங்கள் நடத்தி வரும் சிவராஜ் பெயரில், 3 கோடி ரூபாய் வரை கடன் வாங்கலாம். அவரது கம்பெனி பெயரில், வீட்டை அடமானம் வைத்து, பத்திரப்பதிவு செய்யலாம். அதை திண்டுக்கல் வங்கியில் வைத்து, கடன் பெறலாம்' என கூறியுள்ளனர்.
கூட்டுறவு சொசைட்டியில் ராஜேஸ்வரி அடமானம் வைத்த வீட்டு பத்திரத்தை, 10 லட்சம் ரூபாய் கொடுத்து மீட்டுள்ளனர். அந்த நம்பிக்கையில், ராஜேஸ்வரியின் வீட்டை, சிவராஜின் கம்பெனியில் அடமானம் வைப்பது போல பத்திரம் தயார் செய்து, 2022 ஜன., 3ல் பத்திரப்பதிவு செய்துள்ளனர்.
ராஜேஸ்வரியை திண்டுக்கல் அழைத்து சென்ற சிவராஜ், மணிவண்ணன், சிவசக்தி, மோகன், ரமேஷ்குமார் ஆகியோர், அங்கு தனியார் வங்கி ஒன்றிலும் ராஜேஸ்வரியிடம் கையெழுத்து வாங்கியுள்ளனர்.
அப்போது, 'உங்களுக்கு, 1.50 கோடி ரூபாய் வங்கிக்கடன் கிடைத்துள்ளது. நாளை காலை உங்கள் வங்கி கணக்கிற்கு பணம் வரும்' எனக்கூறி, ராஜேஸ்வரியை அனுப்பினர். ஆனால், ராஜேஸ்வரி வங்கி கணக்கிற்கு பணம் வரவில்லை. பணத்தை சிவராஜ் நடத்திய கம்பெனி பெற்றதும், அவர்கள் பணத்தை பங்கிட்டு கொண்டதும் தெரிந்தது.
ராஜேஸ்வரி, டிச., 31ல், கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்படி மோசடியில் ஈடுபட்ட மணிவண்ணன், 41, என்பவரை போலீசார் கைது செய்து, மேலும் சிலரை தேடி வருகின்றனர்.