மேல்வசலை சாலையில் வேகத்தடை இல்லாததால் விபத்து அபாயம்

சித்தாமூர்,சித்தாமூர் அடுத்த மேல்வசலை கிராமத்தில் நீர்பெயர் - வேட்டூர் செல்லும் 8 கிலோ மீட்டர் நீள தார் சாலை உள்ளது,இதை மேல்வசலை,கீழ்வசலை,நீர்பெயர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர்.

இருசக்கரவாகனம், கார், வேன், பேருந்து, லாரி என தினசரி நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சாலையை கடந்து செல்கின்றன.

மேல்வசலை கிராமத்தில் உள்ள மலைப்பகுதியில் அபாயகரமான சாலை வளைவு உள்ளது.

சாலை வளைவுப் பகுதியில் வேகத்தடை இல்லாததால், வேகமாக வரும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வரும் வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகின்றன.

மேலும் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள மரத்தில் மோதி விபத்து ஏற்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்துடன் சாலை வளைவுப்பகுதியை கடந்து செல்கின்றனர்.

விரைவில் வேகத்தடை அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சாலை வளைவுப்பகுதியில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் வேகத்தடை அமைக்க 2023-24ம் ஆண்டு மதுராந்தகம் ஒன்றிய பொது நிதியில் இருந்து 30 ஆயிரம் ஒதுக்கிடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் தற்போது வரை வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஆகையால் துறை சார்ந்த அதிகாரிகள் சாலை வளைவுப்பகுதியில் விரைந்து வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement