lமாநில தீயணைப்பு பயிற்சி மையம் துவக்கம்... எப்போது? lபோதிய நிதி இல்லாமல் 10 ஆண்டுகளாக இழுபறி

திருப்போரூர் திருப்போரூரில், மாநில தீயணைப்பு பயிற்சி மையம் அமைக்கும் திட்டத்திற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு முதல்கட்ட பணிகள் துவங்கியது. அடுத்த கட்ட பணிகளுக்கு போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததால், 10 ஆண்டுகளுக்கு மேலாகியும், திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பேரூராட்சி, காலவாக்கம் கிராமத்தில், மாநில தீயணைப்பு பயிற்சி மையம், ஏற்படுத்தப்படும் என, கடந்த 2014ம் ஆண்டு, சட்ட சபை கூட்டத்தொடரில், 110 விதியின் கீழ், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

இதையடுத்து, காலவாக்கம் கிராமத்தில், 15 ஏக்கர் இடம் அளவீடு செய்யப்பட்டது.

பழைய மாமல்லபுரம், நான்கு வழிச்சாலையை ஒட்டிய பகுதியில், ஆக்கிரமிப்பு ஏற்படாமல் தடுக்க, சுற்றுச்சுவர் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது.

அதன் பின், அடுத்த கட்டங்களான தீயணைப்பு வாகனங்கள் நிறுத்துமிட வசதி, கருவிகள் வைக்கும் இடம் என, கட்டுமான பணிகள் தொடங்க வில்லை.

அரசின் அறிவிப்பு, வெற்று திட்டமாக கிடப்பில் போடாமல், நிதி ஒதுக்கீடு செய்து, தொடங்கப்பட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதற்கிடையில், இப்பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டால், மீட்பு பணிக்கு சிறுசேரி, மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் போன்ற பகுதிகளில் இருந்து தான் தீயணைப்பு வீரர்கள் வர வேண்டும்.

அவர்கள் வருவதற்குள் பாதிப்பு அதிகரிக்கும். இதனால், திருப்போரூரில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என, மற்றொரு புறம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து, மேற்கண்ட மாநில தீயணைப்பு பயிற்சி மையத்திற்கு ஒதுக்கப்பட்ட ஒரு பகுதி இடத்தில் கடந்த 2023 ம் ஆண்டு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த தீயணைப்பு நிலையத்தை முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

தற்போது இங்கு, ஒரு தீயணைப்பு நிலைய அலுவலர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் என மொத்தம் 10 க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இருப்பினும், மாநில தீயணைப்புத்துறை பயிற்சி மையம் துவங்கப்படாமல் கிடப்பில் உள்ளது.

இந்த பயிற்சி மையம் அமைந்தால், தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் அடிப்படை பயிற்சியான தடை தாண்டுதல், ஆழ்கடல் நீச்சல், கயிறு மூலம் மீட்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் கற்றுத்தரப்படும்.

பயிற்சி முடித்து தேர்வு பெறுபவர்கள் தீயணைப்பு நிலையங்களுக்கு நியமிக்கப்படுவர். மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அனைத்து தீயணைப்பு வீரர்களும் பயிற்சி மேற்கொள்வர்.

எனவே,திருப்போரூர் அடுத்த காலவாக்கத்தில் விரைவில் மாநில தீயணைப்புத்துறை பயிற்சி மையத்தை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து, தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

திருப்போரூரில், இந்திய அளவில், சிறப்பு மிக்க பயிற்சி மையமாக உருவாக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஒரு பகுதியில் தீயணைப்பு நிலையம் செயல்படுகிறது. மற்ற பகுதியில் பயிற்சி மையம் அமைக்கப்படும்.

இதுகுறித்து துறை சார்ந்த கருத்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான போதிய நிதி ஒதுக்கீடு வராததால் திட்டம் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது. விரைவில் இந்த பயிற்சி மையம் அமைக்க அரசு அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி., சாலையில்

வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக பேனர்கள்

கூடுவாஞ்சேரி, பிப். 2-

நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி,ஜி.எஸ்.டி., சாலையில், சாலையின் இருபுறமும் ஆங்காங்கே நிரந்தரமாக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பேனர்களால் அவ்வழியாக, செல்லும் பொதுமக்களுக்கும்,வாகன ஓட்டிகளுக்கும், இடையூறு ஏற்படுவது உடன் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இது குறித்து, சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:

நகராட்சிக்கு உட்பட்ட, பல்வேறு இடங்களில் அரசியல் தொடர்பாக, திருமண நிகழ்ச்சி, நினைவு அஞ்சலி, கண்ணீர் அஞ்சலி, பிறந்தநாள், உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு, பேனர்கள் வைக்கப்படுகின்றன. அவ்வாறு பேனர்களை வைப்பதற்கு, நீதிமன்றமும், தமிழக அரசும் தடை விதித்துள்ளது . ஆனால் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தொடர்ந்து, பேனர் வைக்கும் கலாச்சாரம் நடைபெற்று வருகிறது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.

விதி மீறி வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றி, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் அனுமதி பெறாமல், வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற, மாவட்ட நிர்வாகம். உரியநடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement