தனிமையால் விரக்தி முதிய தம்பதி தற்கொலை

மீஞ்சூர்,மீஞ்சூர் அடுத்த புங்கம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் பாலு, 62, பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி.

முதல் மனைவி பிரிந்து சென்ற பின், இரண்டாவது மனைவி உமா, 55, என்பவருடன், 15 ஆண்டுகளாக, மேற்கண்ட பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

பார்வை குறைபாடால் வேலைக்கு செல்ல முடியாமல் மனைவி உமா, கூலி வேலைக்கு சென்று, கொண்டுவரும் வருவாயில், தம்பதி வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு, குழந்தைகள் இல்லை.

தனிமையை எண்ணியும், வயது மூப்பில் தங்களை கவனித்துக் கொள்ள யாரும் இல்லை என்பதாலும், சில நாட்களாக விரக்தியாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று காலை, நீண்ட நேரமாகியும் இவர்களது வீட்டு கதவு திறக்கப்படாமல் இருந்தது.

அருகில் வசிப்போர் ஜன்னல் வழியாக பார்த்தபோது, பாலு அங்குள்ள குளியல் அறையிலும், உமா வரண்டாவிலும் துாக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர்.

மீஞ்சூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இருவரின் உடல்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.

Advertisement