காரில் கஞ்சா கடத்திய வழக்கு இருவருக்கு 10 ஆண்டு சிறை

சென்னை,
பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, கீழம்பி சந்திப்பு அருகே, கடந்த 2022 ஜூன் 25ல், காஞ்சிபுரம் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமான முறையில் வந்த, 'டாடா ஸ்பேசியோ' காரை பரிசோதித்தனர்.

அதில், காரின் இன்ஜின் கீழ் பகுதியில் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட தனி அறையில், 30 பாக்கெட்டுகளில், 60 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

அவற்றை பறிமுதல் செய்த போலீசார், காரில் இருந்த தேனி மாவட்டம், தேவாரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், 39, மற்றும் பாண்டீஸ்வரன், 29, ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை, போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான முதலாவது கூடுதல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.ஹெர்மிஸ் முன் விசாரணைக்கு வந்தது.

வழக்கில் தொடர்புடைய நபர் மீதான குற்றச்சாட்டுகள், சந்தேகத்துக்கு இடமின்றி, அரசு தரப்பில் நிரூபிக்கப்பட்டு உள்ளன.

எனவே, இருவருக்கும், தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், தலா 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவதாக, நீதிபதி தீர்ப்பளித்தார்.

Advertisement