வீடு விற்பதாக ரூ.2.50 கோடி மோசடி நெசப்பாக்கத்தில் பதுங்கியவர் கைது

ஆவடி, அம்பத்துார், வெங்கடாபுரம், கண்ணையா செட்டி தெருவைச் சேர்ந்தவர் வாசுதேவன், 61; வழக்கறிஞர். இவர், சென்னையில் வீடு வாங்க, இடைத்தரகர் ஜெயச்சந்திரன் என்பவரை அணுகி உள்ளார்.

அப்போது, கே.கே நகர், அழகர்சாமி சாலையில், 2 கிரவுண்ட் அதாவது 4,800 சதுர அடியில் வீடு இருப்பதாக ஜெயச்சந்திரன் கூறியுள்ளார்.

அதன்படி, வாசுதேவன் குடும்பத்தினருடன் சென்று வீட்டை பார்த்து, விலை பேசி வீட்டின் உரிமையாளர் கலைவாணி என்பவரிடம், 2.50 கோடி ரூபாய் முன் பணமாக கொடுத்துள்ளார்.

பின், வீடு குறித்து விசாரித்த போது, வீட்டின் உரிமையாளர்கள் எட்டு பேர் என தெரிந்தது.

இதில், ஒரு பாகம் கலைவாணியின் நாத்தனார் ரேகா என்பவரிடமும், மீதமுள்ள ஏழு பேரின் சொத்து உரிமை கலைவாணியிடமும் இருப்பது தெரிந்தது.

பாகப் பிரிவினையை மறைத்த கலைவாணி, அம்பத்துாரைச் சேர்ந்த ராமசாமி என்பவருக்கு பொது அதிகாரம் கொடுத்து, வாசுதேவனிடம் பணம் பெற்று ஏமாற்றியது தெரிய வந்தது.

இது குறித்து, கடந்த 2023ல், ஆவடி மத்திய குற்றப்பிரிவில், வாசுதேவன் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் விசாரித்த போலீசார், நெசப்பாக்கத்தில் பதுங்கி இருந்த கலைவாணியை கைது செய்து, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.

Advertisement