மதுக்கூடமாக மாறி வரும் வடமங்கலம் நிழற்குடை
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் வடமங்கலம் ஊராட்சி அமைந்துள்ளது. பூந்தமல்லி -- சுங்குவார்சத்திரம் இடையே செல்லும் மாநகர பேருந்து வடமங்கலத்தில் நின்று செல்கிறது. இந்த பேருந்தின் வாயிலாக, ஸ்ரீபெரும்புதுார் மற்றும் சுங்குவார்சத்திரம் பகுதிகளுக்கு தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர்.
அதேபோல், பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவ -- மாணவியர் வடமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் உள்ள பயணியர் நிழற்குடையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இரவு நேரத்தில் சமூக விரோதிகள் சிலர், வடமங்கலம் நிழற்குடையில் அமர்ந்து மது அருந்துகின்றனர்.
மேலும், காலி மது பாட்டில்களை அங்கேயே வீசி செல்கினர். அவை நிழற்குடை முழுதும் நிறைந்து காணப்படுகிறது. இதனால், பேருந்திற்காக காத்திருக்கம் பயணியர் முகம்சுளித்து செல்கின்றனர். நிழற்குடையின் உள்ளே உடைந்துள்ள காலி மதுபாட்டிகள் கால்களை பதம்பார்க்கும் என்பதால், நிழற்குடை உள்ளே செல்ல பயணியர் அச்சப்படுகின்றனர்.
எனவே, பயணியர் நிழற்குடையில் மது அருந்துவதை தடுக்க, ஸ்ரீபெரும்புதுார் போலீசார் இரவு நேரத்தில் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.