அமெரிக்காவை தாக்க நினைத்தால்...; டிரம்ப் பகீர் எச்சரிக்கை
வாஷிங்டன்: 'அமெரிக்காவை தாக்க நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் தேடி கண்டுபிடித்து கொல்வோம்' என அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சோமாலியாவில் குகைகளில் பதுங்கி இருக்கும் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் குழுவினர் மீது வான்வழி தாக்குதல் நடத்த அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அமெரிக்கா வான்வழி தாக்குதலை துவங்கி உள்ளது.
இது குறித்து, டொனால்டு டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குகைகளில் பதுங்கியிருந்த கொலையாளிகள் அமெரிக்காவையும், நமது நட்பு நாடுகளையும் அச்சுறுத்தி வருகின்றனர். அவர்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளேன்.
எந்த வகையிலும் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்காமல், மேலும் பல பயங்கரவாதிகள் மற்றும் குகைகளை அழித்துள்ளோம். அமெரிக்காவை தாக்க நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் தேடி கண்டுபிடித்து கொல்வோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இது குறித்து, சோமாலியா ஜனாதிபதி ஹசன் ஷேக் முகமது கூறியதாவது: பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடுவதில் சோமாலியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையில் வலுவான உறவு இருக்கிறது.
அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையின் கீழ், சர்வதேச பயங்கரவாதிகளுக்கு எதிராக தொடரும் தாக்குதல்களை வரவேற்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.