நீ மழை... நான் மழலை: மென்மை கவிதைக்கு மெஹராஜ்
'நெருங்கிப் பார்த்தேன்
அந்த நிலா ஒன்றும் அற்புதமில்லைவெறும் கல்லும் மண்ணும் தான்'
'மெனக்கடலின் பெயரில் ஒரு
அழகிய புகைப்படத்திற்கு பின்னால்
திணறிக்கொண்டிருந்த
நேர்த்தியற்ற முகத்தில்
அனுபவ ரேகைகள்
அழகாய் பதிந்திருக்கும்!
நீங்கள் அதைத்தான்
தேடித்தேடி பில்டர் வைத்து
அழித்துக் கொண்டிருக்கிறீர்கள்
தடயம் இன்றி!'
-இந்த அற்புத கவிதை வரிகளின் சொந்தக்காரர் கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர் என பன்முகம் கொண்டவர். புதிய சிந்தனைகள், எளிதில் புரிந்து கொள்ளும் கவிதை நடை, அன்பு, காதல், பாசம், சமூகம் சார்ந்த பிரச்னை என அனைத்து பரிமாணங்களிலும் தனது எண்ணத்தை எழுத்து மூலம் மற்றவர்களுடன் பகிர்வதில் தான் எத்தனை ஆனந்தம் என சிலாகிக்கிறார் தேனியைச் சேர்ந்த எழுத்தாளர் மெஹராஜ் இஸ்மாயில்.
பெரியகுளத்தில் வளர்ந்து சென்னையில் திருமணமாகி இரண்டு குழந்தைகளுடன் வசிக்கும் எழுத்தாளர் மெஹராஜ் நம்மிடம் பகிர்ந்தவை: 14 வயதில் இந்த பயணம் ஆரம்பமானது. பள்ளிக்காலங்களில் கவிதை போட்டியில் பரிசு பெற்றேன். முதல் கவிதையே மாவட்ட அளவில் பரிசை அள்ளி தந்தது.
அப்போது கவிதை புத்தகங்கள் நிறைய படிப்பதுண்டு. கல்லுாரியில் ஆண்டு மலர், நண்பர்களுக்கான பிறந்தநாள் கவிதை என அடிக்கடி எழுதுவதுண்டு. இப்படி கவிதை எழுதும் ஆர்வம் இயல்பாகவே அமைந்தது. அன்று தொடங்கி இன்று வரை எண்ணற்ற கவிதைகள் எழுதியுள்ளேன்.
நான் கல்லுாரியில் படிக்கும் போது அலைபேசி பயன்பாடு அவ்வளவாக இல்லை. எனவே தோன்றும் போதெல்லாம் நோட்டுகளில் எழுதி வைத்துவிடுவேன்.
எழுத்தாளர்கள் அப்துல் ரகுமான், மேத்தா வரிகளால் ஈர்க்கப்பட்டேன். மரைன் இன்ஜினியரான கணவர் என் எழுத்திற்கு உறுதுணையாக இருக்கிறார். கணவர் பணிக்கு செல்லும் போது நிறைய நேரம் எனக்கு கிடைத்தது. அப்போது எல்லாம் கவிதை எழுதி முகநுாலில் பதிவிடுவேன். பெரிய ஊக்கமாக முகநுால் வாசகர்கள் அமைந்தனர். கவிதைக்குரிய பாராட்டுகள், கருத்துகள் என்னை உத்வேகப்படுத்தியது. 20 டைரிகளில் கவிதை, சிறுகதை தொகுப்பு எழுதியுள்ளேன். இருந்தும் புத்தகம் எழுத தோன்றவில்லை. ஆனால் முகநுாலில் கிடைத்த வரவேற்பு என்னை புத்தகம் எழுத துாண்டியது.
பரிசு பெற்ற கவிதைகளின் தொகுப்பாக, 'நீ..மழை நான் மழலை' என்ற முதல் கவிதை புத்தகத்தை வெளியிட்டேன். முதல் பிரவசம் போன்ற அழகிய பயம் கலந்த உணர்வு. அதில் வெற்றி பெற்று விட்டேன். 'எந்த கவிதையிலும் முதல் புத்தகம் போன்ற உணர்வு இல்லை' என்று நிறைய வாசகர்கள் வாழ்த்தினர். பிற எழுத்தாளர்களின் பாராட்டுக்களும் உத்வேகத்தை அளிக்கின்றன. ஏதோ பொறுப்பு வந்தது போன்ற உணர்வு.
முதல் புத்தகத்திற்கான வரவேற்பை பார்க்கும் போது, எழுத்துலகத்திற்கு தாமதமாக வந்துவிட்டோமோ என எண்ணுகிறேன். இருந்தும் எழுத்திற்கு வயதில்லை என்பதால் தொடர்ந்து நிறைய புத்தகங்கள் எழுத தயாராகி விட்டேன்.
எனது முக்கிய குறிக்கோள், கவிதை அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதே. மிகுந்த கவிதை நயத்துடன் எழுதினால் புரிதல் இல்லாமல் போய்விடுமோ என்ற சிறு எண்ணம் எனக்கு உண்டு.
இன்றைய துரித காலத்தில் நீண்ட நெடிய கவிதை படிக்கும் நேரத்தில் 3, 4 வரி கவிதை என்றால் படிப்பவர்கள் மனதில் ஆழமாக பதியும். ஆகையால் அதில் கவனம் செலுத்துகிறேன்.
என்னை புதுப்பித்தும், இளமையுடனும் வைத்திருக்க என்னுள் காதல் கவிதைகள் தவழ்ந்து கொண்டே இருக்கிறது. கருவினை சுமந்து கொண்டே திரியும் நிரந்தர கர்ப்பவதியாக ஒரு கவிஞனாக உணருகிறேன். அடுத்ததாக எனது சொந்த வாழ்வை தழுவிய நாவல் எழுதி கொண்டிருக்கிறேன். இடையில் சிறு கவிதை புத்தகமும் வெளியிட திட்டமுண்டு.
பெண் எழுத்தாளர்கள் முதல் புத்தகத்தை எழுதி விட்டு தொடராமல் விடுகின்றனர் என்ற ஏக்கம் எனக்குள் உண்டு. அதை நிவர்த்தி செய்ய விரும்புகிறேன்.
இவ்வாறு கூறினார்.