ராகங்களுக்கு ஒரு ராகப்ரியா

சங்கம் வைத்து தமிழ் வளர்க்கும் மதுரையில் கர்நாடக இசையை பாதுகாப்பதற்காக ராகப்ரியா சேம்பர் மியூசிக் கிளப் மூலம் 55 ஆண்டுகளாக கர்நாடக இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

1969 அக்டோபர் 23 அன்று விஜயதசமியில் டாக்டர் சீனிவாசனால் மதுரையில் துவங்கப்பட்டது இந்த கர்நாடக இசை கிளப் என்று பெருமிதமாய் பேசினார் கிளப் செயலாளர் ரவி.

ராகப்ரியா சேம்பர் மியூசிக் கிளப் ஆரம்பித்த கதையும் சுவாரசியமானது. மதுரையில் அப்போது தான் பாண்டியன் ஓட்டல் கட்டப்பட்டது. டாக்டர் சீனிவாசன் தனது வீட்டில் இசை கிளப்பை அப்போது தான் ஆரம்பித்ததால் முதன்முறையாக டாக்டர் ராமநாதனின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சியை மைக் இல்லாமல் அந்த ஓட்டலில் நடத்தினோம். பார்வையாளர்கள் தரையில் அமர்ந்து ரசித்தனர். வெள்ளி விழா, பொன்விழாவை கடந்து 55வது ஆண்டில் உள்ளோம். வளரும் கர்நாடக வாய்ப்பாடு கலைஞர்களை மாதந்தோறும் சனிக்கிழமைகளில் இதே ஓட்டலில் பாட வைக்கிறோம்.

ஆரம்ப கட்டத்தில் பாடகர்கள் சஞ்சய் சுப்ரமணியம், ரஞ்சனி காயத்ரி, சுதா ரகுநாதன், பாம்பே ஜெயஸ்ரீ, நித்யஸ்ரீ மகாதேவன், சவுமியா இங்கு வந்து பாடியுள்ளனர். தெலுங்கு கீர்த்தனைகளுடன் 60 சதவீதம் தமிழ் கீர்த்தனைகளும் பாடப்படுகிறது. வயலின், மிருதங்கம், வாய்ப்பாட்டுடன் மட்டுமே மாதந்தோறும் ஒரு சனிக்கிழமையில் மாலை 6:00 முதல் இரவு 8:30 மணி வரை நிகழ்ச்சி நடத்துகிறோம்.

கர்நாடக இசைப்பயிற்சி பெற்ற வளரும் பாடகர்களை பாட வைக்கிறோம். இரண்டரை மணி நேரம் சாதகம் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் வாய்ப்பு தருகிறோம். அவ்வப்போது ஸ்பான்ஸர்கள் நிதி தருகின்றனர். ஆன்மிகப்பாடல்கள், பாரதியார் பாடல்கள், தேசப்பற்று பாடல்கள் தான் இங்கு பாடப்படுகிறது. ஓட்டலில் குறைந்த கட்டணத்தில் ஹால் தருவதுடன் பார்வையாளர்களுக்கு சூடாக காபியும் இலவசமாக தந்து எங்களை அங்கீகரிப்பதை இசைக்கு தரும் மரியாதையாக பார்க்கிறோம்.

ஆண்டுதோறும் ஆகஸ்டில் தொடர்ந்து 5 நாட்கள் மாலைநேரத்தில் கர்நாடக இசைவிழா நடத்துகிறோம். பிரபல இசைக்கலைஞர்களை அழைத்து வருகிறோம். கர்நாடக சங்கீதத்தை ரசிப்பதற்கு மதுரையில் ரசிகர்கள் உள்ளனர் என்பது பெருமையான விஷயம். ஜனவரியில் சேலம் காயத்ரி வெங்கடேசன் பாடினார். பிப். 8ல் பத்மஸ்ரீ சீனிவாசன் பாடுகிறார்.

கிளப் தலைவர் ரஞ்சனி, பொருளாளர் சிவராமன் ஒருங்கிணைப்பில் நுாறாண்டைக் கடந்தும் எங்களது அடுத்தடுத்த தலைமுறைகள் இந்த இசை கிளப்பை வாழ வைப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.

இவரிடம் பேச: 97109 18811.

Advertisement