தேர்தங்கல், சக்கரக்கோட்டை பறவைகள் சரணாலயம் ராம்சார் பகுதிகளாக அறிவிப்பு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேர்தங்கல், சக்கரக்கோட்டை கண்மாய் பறவைகள் சரணாலயங்கள் ராம்சார் பகுதிகளாக அறிவிக்கப்பட்டன.
கடந்த 1971 பிப்., 2ல் ஈரான் நாட்டில் நடந்த ஒப்பந்தத்தின்படி, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈர நிலங்களை பாதுகாத்து மேம்படுத்துவதற்காக பன்னாட்டு ஒத்துழைப்பு வழங்குவது தான் ராம்சார் ஒப்பந்தம். இந்தியாவில், 85 ராம்சார் பகுதிகள் உள்ளன.
தமிழகத்தில், 18 ராம்சார் பகுதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தாண்டு தற்போது தேர்தங்கல், சக்கரக்கோட்டை கண்மாய் பறவைகள் சரணாலயங்கள் ராம்சார் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
தேர்தங்கல் கண்மாய் 2010லும், சக்கரக்கோட்டை கண்மாய் 2012லும் பறவைகள் சரணாலயங்களாக அறிவிக்கப்பட்டன.
தற்போது தேர்தங்கல் சரணாலயத்தில் 74 ஏக்கர், சக்கரக்கோட்டை கண்மாயில் 575 ஏக்கர் நிலங்கள் ராம்சார் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் தான் அதிகளவில் ராம்சார் பகுதிகள் உள்ளன. இம்மாவட்டத்தில் மட்டும் ஐந்து பகுதிகள் உள்ளன. மன்னார் வளைகுடா, காஞ்சிரங்குளம், சித்தரங்குடி பறவைகள் சரணாலயங்கள் ஏற்கனவே ராம்சார் பகுதிகளாக அறிவிக்கப்பட்டன.
இப்பகுதிகள் கடல் மட்டத்தை விட குறைவான உயரம் கொண்ட சதுப்பு நிலங்கள். இவை, பறவைகள் சரணாலயங்களாக மட்டுமின்றி, பல்லுயிர் இனப்பெருக்கம் நிறைந்த பாதுகாக்கப்பட்ட பகுதியாக வனத்துறை அறிவித்துள்ளது.