நடுத்தர மக்களின் 'சுமை குறையும்'

சென்னை : மத்திய பட்ஜெட் குறித்து, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கொங்குநாடு முன்னேற்ற கழக நிறுவன தலைவர் பெஸ்ட் ராமசாமி, ஆகியோரது அறிக்கை:


பன்னீர்செல்வம்: ஏழை, எளிய, நடுத்தர மக்களின் சுமையை குறைக்கும் பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு, 20 கோடி ரூபாய் வரை கடன் மானியம், தோல் பொருட்கள் துறையில், 22 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு, நடப்பாண்டில், 10 ஆயிரம் மருத்துவ படிப்பு இடங்கள், அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் மையங்கள், 120 புதிய விமான நிலையங்கள், 36 உயிர் காக்கும் மருந்துகள், லித்தியம் பேட்டரிக்கு சுங்க வரி விலக்கு, தனிநபர் வருமான வரி உச்சவரம்பு, 12 லட்சம் ரூபாயாக உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகள் மகிழ்ச்சி அளிக்கின்றன.


நாட்டின் நிதி பற்றாக்குறை குறைந்து வருவது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், இந்தியா மூன்றாவது இடத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதை காட்டுகிறது.

மொத்தத்தில் மக்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும், நாட்டை வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்லும் வகையில், மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது.

பெஸ்ட் ராமசாமி: வருமான வரிக்கு உச்ச வரம்பு அதிகரிப்பு; வாகனங்களுக்கான பேட்டரிகளுக்கு வரி ரத்து; சிறு, குறு தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் கடன் திட்டங்கள்; புதிய தொழில் முனைவோரை மேம்படுத்தும் திட்டங்கள் என சிறப்பான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


கிஷான் விகாஸ் கிரடிட் கார்டுக்கு 5 லட்சம் ரூபாய் கடன் வரம்பு அதிகரிப்பு விவசாயிகளுக்கு பெரும் பயன்தரும். தானிய விருக்ஷா திட்டம் விவசாயிகள், கிராமப்புற பெண்கள், நிலமில்லாத விவசாயிகள், இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பினை வழங்கும்.


பீஹாரில் அமையும் தேசிய உணவு தொழில் நுட்ப மையம் வேளாண் தொழிலுக்கு மிகுந்த உறுதுணையாக அமையும்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement