சத்தீஸ்கரில் பறவை காய்ச்சல் 17,000 கோழிகள் அழிப்பு
ராய்கர்: சத்தீஸ்கர் மாநிலம், ராய்கர் மாவட்டத்தில் அரசு நடத்தும் கோழிப்பண்ணை உள்ளது. இங்கு சமீபத்தில் சில கோழிகள் இறந்து கிடந்தன. அதிலிருந்து மாதிரிகளை சேகரித்த கால்நடை துறையினர், அவற்றை பரிசோதனைக்காக போபாலில் உள்ள தேசிய விலங்குகள் நோய் கண்டறியும் நிறுவனத்துக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் முடிவுகள் நேற்று முன்தினம் கிடைத்தன. கோழிகள், 'எச்5என்1' எனும் பறவைக் காய்ச்சல் வைரஸ் தாக்கி இறந்தது உறுதியானது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் அவசர கூட்டம் நடத்தினார். அதில் பறவைக் காய்ச்சல் மற்ற பண்ணைகளுக்கு பரவாமல் தடுக்க வழக்கமான செயல்முறையை பின்பற்றும்படி கூறினார்.
அதன்படி கால்நடை மற்றும் மாநகராட்சி துறையினர் இணைந்து பண்ணையில் இருந்த 5,000 கோழிகள், 12,000 காடைகள் மற்றும் 17,000 முட்டைகள், அங்கு வைக்கப்பட்டிருந்த கால்நடை தீவனம் ஆகியவற்றை இரவோடு இரவாக அழித்தனர். அதன் பின் கிருமிநாசினி கொண்டு பண்ணையை துப்புரவாக சுத்தம் செய்து சீல் வைத்தனர்.
மேலும், பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்ட பண்ணையில் இருந்து 1 கி.மீ., சுற்றளவு பகுதி பாதிக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் வரும் பண்ணைகளிலும் கோழிகளை அழிக்க உத்தரவிட்டுள்ளனர். அதற்கு நஷ்ட ஈடு வழங்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
இந்த தொற்று மனிதர்களுக்கு பரவவில்லை என சுகாதார துறையினர் கூறினர். இருப்பினும் 1 கி.மீ., சுற்றளவில் வசிப்பவர்களிடம் வீடு வீடாக சென்று பரிசோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.