பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் 23 பேர் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் 18 பேர் பலி

5


இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் பாதுகாப்புப்படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே இருவேறு இடங்களில் நடந்த மோதல்களில், 23 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்; பாதுகாப்பு படையினர் 18 பேர் உயிரிழந்தனர்.


நம் அண்டை நாடான பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள பலோச் விடுதலைப் படை மற்றும் இதர பிரிவினைவாத அமைப்புகள் சமீபகாலமாக பொது மக்கள் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன. இதையடுத்து, கிளர்ச்சியாளர்களை ஒடுக்கும் நோக்கில், பலுசிஸ்தானின் கலாட் பகுதியில் பயங்கரவாதிகளின் பதுங்குகுழிகளை கண்டறிந்து பாதுகாப்புப் படையினர் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தினர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த 12 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதேபோல் ஹர்னாய் மாவட்டத்தில் பயங்கரவாத அமைப்புக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த மோதலில், 11 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.



இதன் வாயிலாக, கடந்த 24 மணி நேரத்தில், மொத்தம் 23 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தானின் பாதுகாப்புப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், இருவேறு இடங்களில் நடந்த இந்த மோதல் சம்பவங்களில், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 18 வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Advertisement