இன்னிசை மேடைகளின் இளையராணி: மனதை மயக்கும் ஸ்வேதாஸ்ரீ

எங்கோ ஒரு மூலையில் நமக்கு பிடிச்ச ஒரு பாட்டு காற்றோடு காற்றாக கலந்து நம் செவியை வந்தடையும் போது கை விரல்கள் நம் கண்ட்ரோலை தாண்டி தாளமிட ஆரம்பிக்கும். மனம் உற்சாகமாகும். அந்த இசையின் லயத்தில் மூழ்கி தித்திக்கலாம். இசையும், குரலும் சரியாக பொருந்தும் இன்னிசை கச்சேரிகள், நம்மில் பல மாயங்கள் செய்துவிடும். இசைக்கு ஏற்ற குரல் வளத்துடன் பல மேடை கச்சேரிகளில் பாடி அசத்தி வருகிறார் சென்னையை சேர்ந்த ஸ்வேதாஸ்ரீ.

இவர்சண்டே ஸ்பெஷல் பகுதிக்காக நம்மிடம்...

அப்பா உமாசங்கர். அம்மா ஹேமமாலினி. தற்போது 10ம் வகுப்பு படித்தாலும் என் நான்கரை வயது முதல் எனக்கு இசை, பாடலுடன் தொடர்பு ஏற்பட்டது. அம்மாவின் தாலாட்டு தான் இசை ஈர்ப்புக்கான அடிப்படை. சிறு வயது முதல் பல டிவி நிகழ்ச்சியில் பாடல் போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். பாடகர்கள் மனோ, அனுராதாஸ்ரீராம், ஸ்ரீனிவாஸ், விஜய்பிரகாஷ் முன்னிலையில் பாடி பரிசு வென்றுள்ளேன். பாடகர் டி.எம்.சவுந்திரராஜனுக்காக நடத்தப்பட்ட விழாவில் 'பார்த்த நியாபகம் இல்லையோ' என்ற பாடலை பாடகி சுசீலா முன் பாடினேன். குரலை கேட்டு ஸ்பெஷலாக பாராட்டி பரிசு வழங்கினார்.

சென்னையில் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி ரிஹானா, பாத்திமா நடத்தும் இசை கல்லுாரியில் கிளாசிக், வெஸ்டர்ன் இசை கற்றுள்ளேன். பிரபல வெஸ்டர்ன் மியூசிக் டிரைனர் அகஸ்தின்பாலிடம் இசையில் 8 வது கிரேடு முடித்துள்ளேன். சென்னையை சேர்ந்த ரஞ்சிதா தேவி நடத்தும் 'ராக்கிங் கேர்ல்ஸ்' இசை குழுவில் பிரதான பாடகியாக உள்ளேன். இதுவரை தமிழகம் உட்பட 40க்கும் மேற்பட்ட மேடைகளில் பாடியுள்ளேன். என் பாட்டிற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளித்துள்ளனர்.

மலேசியாவில் மட்டும் 7 இன்னிசை கச்சேரிகளில் பாடியுள்ளேன். பாடுவது எனக்கு விருப்பமான விஷயம்; அதேநேரம் படிப்பு என் வாழ்க்கை. டாக்டர் ஆவது என் லட்சியம். படிப்பு, பாட்டு இரண்டும் பாதிக்காதவாறு என் லட்சிய, இசை பயணம் தொடரும். பாடல் தவிர மாடலிங், விளம்பரங்களில் நடித்து வருகிறேன். சினிமா வாய்ப்பும் கிடைத்து வருகிறது. வெப் சீரியஸ் ஒன்றிலும் நடித்து வருகிறேன். எதிர்காலத்தில் சர்வதேச தரத்தில் மியூசிக் கிளப் துவங்க வேண்டும் என்பது லட்சியம் என்கிறார் இந்த இசை இளையராணி!

தொடர்புக்கு: 77088 02810.

Advertisement