பெங்களூரில் சாலை பள்ளங்கள் அதிகரிப்பு; கை கட்டி வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள்

பெங்களூரு: நாட்டில் மிக அதிகமான சாலைப் பள்ளங்கள் மற்றும் ஒட்டுப்போடப்பட்ட சாலைகள் உள்ள நகரங்களுக்கு இடையே போட்டி வைத்தால், பெங்களூரு முதல் இடத்தை பிடிக்கும். அந்த அளவுக்கு நகரின் சாலைகள் மோசமாக உள்ளன.

கார்டன் சிட்டி, சிலிகான் சிட்டி, உலகிலேயே அதிவேகமாக வளரும் நகர் என்ற பெருமை பெற்றுள்ளது பெங்களூரு. ஆனால் போக்குவரத்து நெருக்கடி, சாலைப் பள்ளங்கள், குப்பை பிரச்னையால் அவப்பெயருக்கு ஆளாகியுள்ளது. குறிப்பாக சாலைப் பள்ளங்கள், நகருக்கு களங்கத்தை ஏற்படுத்துகின்றன.

நகரில் ஒட்டுப் போடாத சாலைகள், பள்ளங்கள் இல்லாத சாலைகளே இல்லை. விதான்சவுதா, ராஜ்பவன், கர்நாடக உயர் நீதிமன்றம், பெங்களூரு மாநகராட்சி அலுவலகம், கே.ஆர்.மார்க்கெட், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்களின் இல்லங்கள் உள்ள சாலைகள் மற்றும் இந்த சாலைகளுக்கு இணைப்பு ஏற்படுத்தும் சாலைகளில் கூட பள்ளங்கள் உள்ளன.

மிக அதிகமான வாகனங்கள் செல்லும் நகரின் மத்திய பகுதி சாலைகளிலும் பள்ளங்கள் தென்படுகின்றன. பள்ளங்கள் இருப்பதால், வானக ஓட்டிகள் 'சர்க்கஸ்' செய்தபடி செல்ல வேண்டியுள்ளது. பைக், சரக்கு வாகனங்களில் செல்வோர், அதிகம் பாதிப்படைகின்றனர்.

விபத்துகள் அதிகரிக்கவும், சாலைப் பள்ளங்கள் காரணமாகின்றன. உயிரிழப்பு ஏற்பட்ட உதாரணங்களும் உள்ளன. மழைக்காலத்தில் மாநகராட்சி தரமற்ற முறையில், பெயரளவில் பள்ளங்களை மூடியது. நாளடைவில் சிமெண்ட் பெயர்ந்துள்ளன. ஜல்லிக்கற்கள் சாலை முழுதும் பரவி கிடக்கின்றன. இதில் இரு சக்கர வாகனங்கள் வழுக்கி விழுகின்றனர்.

சாலைப் பள்ளங்களை மூட வேண்டிய மாநகராட்சி அதிகாரிகள், அதில் அக்கறை காட்டவில்லை. ஏதேதோ காரணம் கூறி, நாட்களை கடத்துகின்றனர். சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.

இதை ஒப்பந்ததாரர்கள்தான் சரி செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் சரி செய்யவில்லை. இதை மாநகராட்சி கண்டுகொள்ளவில்லை.

அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களின் அலட்சியத்தால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாதிப்படைகின்றனர்.

விரைவில் சாலைகளை சரி செய்யும்படி வலியுறுத்துகின்றனர். சமூக வலைதளத்திலும் சாடுகின்றனர்.

Advertisement