'பூட்டிய வீடு சோதனை முறை திட்டம்' பெங்களூரில் போலீசார் துவக்கம்
பெங்களூரு: பெங்களூரு தெற்கு பிரிவு பகுதி மக்கள், தங்கள் வீட்டை பூட்டிவிட்டு, மூன்று நாட்கள் அல்லது ஒரு வாரம் வெளியூருக்கு நிம்மதியாக சென்று வரலாம். இவர்களின் வீடுகளின் பாதுகாப்புக்காக, பூட்டிய வீடு சோதனை முறை திட்டத்தை, பெங்களூரு தெற்கு பிரிவு போலீசார் நடைமுறைப்படுத்தி உள்ளனர்.
பெங்களூரில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. வீட்டை பூட்டி விட்டு, கடைக்கு சென்று வருவதற்குள், வீட்டின் பூட்டை உடைத்து, தங்க நகைகள், விலை உயர்ந்த பொருட்களை திருடிச் சென்றுவிடுகின்றனர். இதனால், பலரும் அச்சப்படுகின்றனர்.
இந்நிலையில், பெங்களூரு தெற்கு பிரிவு போலீசார், பூட்டிய வீடு சோதனை முறை திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளனர்.
இதுகுறித்து தெற்கு பிரிவு டி.சி.பி., லோகேஷ் ஜகலசார் கூறியதாவது:
வெளியூர் செல்ல விரும்புவோர், தங்கள் வீட்டை பாதுகாக்க, அவர்களின் பெயர், முகவரி, மொபைல் போன் எண்ணை, 94808 01500 என்ற எண்ணுக்கு வாட்ஸாப் அனுப்ப வேண்டும். வாட்ஸாப் அனுப்ப தெரியாதவர்கள், கட்டுப்பாட்டு அறையின் 080 - 2294 3111 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு, விபரத்தை தெரிவிக்க வேண்டும்.
இவ்விரு எண்களுக்கும் தகவல் அளித்ததும், சம்பந்தப்பட்ட முகவரிக்கு உட்பட்ட போலீஸ் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்படும். இரவு நேரத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடும் போலீசார், குறிப்பிட்ட வீடு இருக்கும் பகுதிக்கு சென்று, அனைத்தும் சரியாக உள்ளதா என கண்காணிப்பர். பூட்டிய வீட்டை நாள் ஒன்றுக்கு ஒரு முறையாவது சம்பந்தப்பட்ட பகுதியின் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்வையிட வேண்டும். இதன் மூலம், தவறு செய்ய நினைப்பவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும்.
ரோந்துப் பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசார், பூட்டிய வீட்டின் நிலவரம் குறித்து, அவரவர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் அளிப்பர். நான் இரவு நேர பணியில் ஈடுபடும்போது, நானும் அதையே செய்வேன். தெற்கு பிரிவில், பசவனகுடி, ஜெயநகர், ஜே.பி., நகர், பனசங்கரி, பத்மநாப நகர், கே.எஸ்., லே - அவுட் உட்பட 16 சட்டம் - ஒழுங்கு போலீஸ் நிலையங்கள் உள்ளன. இதில், 1,300 போலீசார் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.