வாலிபரை 'ஹனிடிராப்' செய்த பெண்கள் உட்பட 6 பேர் கைது

ஹெப்பால் : பெங்களூரு, ஹெப்பாலில் வசிப்பவர் 27 வயது வாலிபர். இவருக்கு, மஞ்சுளா, 40, என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. 'திருமணத்திற்கு பெண் தேடுவதாகவும், உங்கள் உறவினர் வழியில் பெண் இருந்தால் கூறுங்கள்' என, மஞ்சுளாவிடம், வாலிபர் கூறி இருந்தார். 'என் உறவுகாரப் பெண் ஒருவர் இருக்கிறார். அவரது பெற்றோரிடம் பேசுகிறேன்' என்று மஞ்சுளா கூறினார்.


கடந்த மாதம் 1ம் தேதி பெண்ணை காட்டுவதாக கூறி, வாலிபரை ஒரு வீட்டிற்கு மஞ்சுளா அழைத்துச் சென்றார். அந்த வீட்டில் இன்னொரு பெண் இருந்தார். 'இந்த பெண்ணை தான் நீங்கள் பார்க்க வந்து இருக்கிறீர்கள்' என்று கூறினார்.


'இருவரும் பேசிக் கொண்டு இருங்கள். நான் வருகிறேன்' என்று கூறி மஞ்சுளா வெளியே சென்றார். பின், வீட்டில் இருந்த பெண், வாலிபர் அருகில் நெருக்கமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். திடீரென வீட்டிற்குள் போலீஸ் சீருடையில் மூன்று பேர் வந்தனர்.


வாலிபரிடம், 'வீட்டில் வைத்து விபசாரம் செய்கிறீர்களா?' என்று அவர்கள் கேட்டனர். 'நான் பெண் பார்க்க வந்தேன்' என்று வாலிபர் கூறினாலும், அவரை மிரட்டி 50,000 ரூபாயை பறித்துவிட்டு தப்பினர். இதுகுறித்து ஹெப்பால் போலீஸ் நிலையத்தில் வாலிபர் புகார் செய்தார்.


விசாரணையில் 'ஹனிடிராப்' முறையில் வாலிபரை மிரட்டி பணம் பறித்ததும், இதற்கு மஞ்சுளா உடந்தையாக செயல்பட்டதும் தெரிந்தது. தலைமறைவாக இருந்த மஞ்சுளா, அவரது கூட்டாளிகள் கீதா, விஜயலட்சுமி, லீலாவதி, ஹரிஷ், வெங்கடேஷ் ஆகியோர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.

Advertisement