வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டத்தில் பால் பண்ணையில் சாதித்த வாலிபர்
கர்நாடகா - தமிழகம் எல்லையில் உள்ளது சாம்ராஜ்நகர் மாவட்டம். வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டம் என்பதால் இங்கு வசிப்போர் பெரும்பாலும் பிழைப்புக்காக தமிழகம், கேரளாவுக்கு வேலைக்கு செல்கின்றனர். ஆனாலும் ஒரு வாலிபர் பால் பண்ணை வைத்து சாதித்து உள்ளார்.
சாம்ராஜ்நகரின் குண்டுலுபேட் தாலுகா லக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் உமேஷ் விஸ்வராத்யா, 34. கல்லுாரி முடித்ததும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்தார். அந்த வேலையில் அவருக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை. சொந்த தொழில் செய்வது என்ற முடிவுக்கு வந்தார்.
வளர்ச்சியில் பின்தங்கிய பகுதியில் இருப்பதால் என்ன செய்வது என்று தெரியவில்லை. விவசாயம் செய்யலாம் என்று நினைத்தார். ஆனால் குடும்பத்தினரும், நண்பர்களும் பால் பண்ணை துவங்கலாம் என்று 'ஐடியா' கொடுத்தனர்.
முதலில் ஐந்து மாடுகளை வாங்கினார். மாடுகளில் இருந்து கிடைக்கும் பாலை விற்றார். அதில் நல்ல லாபம் கிடைத்ததால் தொடர்ந்து மாடுகளை வாங்கினார்.
தற்போது அவரிடம் 80 க்கும் மேற்பட்ட மாடுகள் உள்ளன. பால் பண்ணை நடத்தும் அவர், கூட்டுறவு சங்கத்திற்கும் பால் கொடுக்கிறார்.
இதுகுறித்து உமேஷ் விஸ்வராத்யா கூறியதாவது:
நான் 80 க்கும் மேற்பட்ட பசுக்களுடன் பால் பண்ணை நடத்தி வருகிறேன். இயந்திரம் மூலம் பால் கறக்கிறேன். தொழுவத்தை சுத்தம் செய்யவும் இயந்திரம் உள்ளது. இதனால் அதிக மனித உழைப்பு தேவைப்படுவது இல்லை. பால் விற்பதன் மூலம் மாதம் 2.50 லட்சம் ரூபாய் முதல் 3 லட்சம் ரூபாய் வரை கிடைக்கிறது.
பசுக்களுக்கு ஏதாவது உடல்நலம் பாதிக்கப்பட்டால் நானே முதலுதவி அளிக்கிறேன். நோய் அதிகமானால் கால்நடை மருத்துவர்களை அழைக்கிறேன். கடவுள் புண்ணியத்தில் கடந்த 2 ஆண்டுகளாக எனது பசுக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இன்னும் நிறைய பசுக்களை வாங்கி வளர்க்க வேண்டும் என்பது எனது ஆசை.
குடும்பத்தினர் ஊக்கம் தான் பால் பண்ணை தொழிலில் நான் சாதிக்க காரணம். வேலையில்லா இளைஞர்கள் சுயதொழில் செய்ய வேண்டும் என்பது எனது வேண்டுகோள். எல்லாம் சாத்தியம் என்ற உறுதியான மனநிலையில் இருந்தால் வெற்றி தான். என்னை ஊக்குவிக்கும் வகையில் உழவர் தினத்தில், எனக்கு முன்மாதிரி விவசாயி விருது வழங்கி மாவட்ட நிர்வாகம் பாராட்டியது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -