பலாத்கார குற்றவாளிகளுக்கு இனி... சொத்துரிமை பறிப்பு! சட்டம் கொண்டு வர அரசு திட்டம்

பெங்களூரு: பலாத்கார சம்பவங்கள் அதிகரிப்பதை, தீவிரமாக கருதிய கர்நாடக அரசு, பலாத்கார குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க திட்டமிடுகிறது; சட்ட அஸ்திரத்தை பிரயோகிக்க முடிவு செய்துள்ளது. இவர்களின் சொத்துரிமையை பறிக்க வகை செய்யும் சட்டம் கொண்டுவர மாநில அரசு தயாராகிறது.


பெங்களூரு உட்பட, மாநிலத்தின் பல இடங்களில் பெண்கள், சிறுமியர் பலாத்காரம் செய்யப்படும் சம்பவங்கள் நடக்கின்றன. பெங்களூரில் சமீபத்தில் வடமாநில பெண்ணொருவர், கொடூரமாக பலாத்காரத்துக்கு ஆளாகி, கொலை செய்யப்பட்டார்.

நடவடிக்கைகள்



இரண்டு நாட்களுக்கு முன், ராம்நகர் மாவட்டத்தின், பிடதியில், இளம்பெண் ஒருவர், பக்கத்து வீட்டில் வசிக்கும் அசாம் இளைஞரால் பலாத்காரம் செய்யப்பட்டார்.

தினமும் ஒரு பலாத்கார சம்பவமாவது வெளிச்சத்துக்கு வருகிறது. 'போக்சோ' வழக்குகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. திருமண ஆசை காண்பித்து, சிறுமியர் பலாத்காரம் செய்யப்படுகின்றனர். 2 வயது, 3 வயது சிறுமியரையும், காமுகர்கள் விட்டு வைப்பதில்லை. இது, சமூகத்தை தலை குனிய வைக்கும் விஷயமாகும்.

பெண்களுக்கு எதிரான பலாத்கார குற்றங்களை கட்டுப்படுத்தும் நோக்கில், போக்சோ சட்டம் ஏற்கனவே அமலில் உள்ளது. இது கடுமையான சட்டமாகும். இந்த சட்டத்தின் கீழ் கைதானவர்களுக்கு, எளிதில் ஜாமினும் கிடைக்காது. நீதிமன்றங்களும் கூட, பலாத்காரங்களை தீவிரமாகக் கருதி, குற்றவாளிகளுக்கு 20 முதல் 30 ஆண்டுகள் துவங்கி ஆயுள் தண்டனை வரை விதிக்கின்றன. ஆனால், இந்த சட்டம் அமலில் இருந்தும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

கர்நாடகாவில் இத்தகைய சம்பவங்கள், நாளுக்கு நாள் அதிகரிப்பதால், அரசுக்கு தர்மசங்கடம் ஏற்படுகிறது. பலாத்கார குற்றவாளிகளுக்கு பாடம் புகட்ட அரசு உறுதிபூண்டுள்ளது; இவர்களின் சொத்துரிமையை பறிக்க திட்டமிட்டுள்ளது.

கடந்த 2014ல், மாநிலத்தில் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்தன. இவற்றை கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து, ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி, அன்றைய காங்கிரஸ் அரசில், முதல்வராக இருந்த சித்தராமையா, நானய்யா தலைமையிலான கமிட்டியை அமைத்தார்.

கமிட்டியும் ஆய்வு செய்து, அறிக்கை அளித்திருந்தது. கமிட்டியின் சிபாரிசுகளில், பலாத்கார குற்றவாளிகளின் சொத்துரிமையை பறிப்பதும் ஒன்று. பெண்கள் அல்லது சிறுமியை பலாத்காரம் செய்து, கைதாகும் நபர்களுக்கு குடும்ப சொத்து களில் உரிமையில்லை என்ற சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என, கமிட்டி சிபாரிசு செய்திருந்தது.

அறிக்கை



ஆய்வறிக்கை பரிசீலனையில் இருந்த நிலையில், மாநிலத்தில் அரசு மாறியது. அறிக்கை கிடப்பில் போடப்பட்டது. 10 ஆண்டுகளுக்குப் பின், அறிக்கைக்கு உயிர்கொடுக்கப்படுகிறது. சமீப நாட்களாக பலாத்காரங்கள் அதிகரிப்பதால், நானய்யா அறிக்கையை அரசு தற்போது கையில் எடுத்துள்ளது. சிபாரிசுகளை செயல்படுத்துவது குறித்து, ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி, தலைமைச் செயலருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, உள்துறை அதிகாரிகள் கூறியதாவது:

பலாத்கார குற்றவாளிகளுக்கு, கடுமையான தண்டனை கிடைத்தே ஆக வேண்டும். சட்டத்தை பற்றிய பயத்தை ஏற்படுத்தி, இவர்களின் திமிரை அடக்க வேண்டும். இதற்கு சரியான சட்டம் வேண்டும்.

நானய்யா தலைமையிலான வல்லுநர் கமிட்டி, ஏற்கனவே சிபாரிசுகள் செய்துள்ளது. இதை செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி, தலைமைச் செயலருக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது. கமிட்டி அறிக்கையில், பலாத்கார குற்றவாளிகளின் சொத்துரிமையை பறிக்கும்படி, சிபாரிசு செய்யப்பட்டுஉள்ளது.

சொத்துரிமை மட்டுமல்ல, இத்தகைய குற்றவாளிகளுக்கு அரசின் அனைத்து சலுகைகளையும் பறிக்க வேண்டும். ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, ஸ்காலர்ஷிப் உட்பட எந்த சலுகைகளும் கிடைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அளிக்கப்பட்ட சலுகைகளை திரும்பப் பெற வேண்டும் என, வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement