மதங்கள் இடையே துாண்டுகிறேனா? நடிகர் பிரகாஷ் ராஜ் திட்டவட்ட மறுப்பு

1

மைசூரு: “நான் எப்போதும் மதங்களுக்கு இடையே துாண்டி விடும் வேலை செய்ததில்லை. இந்த வேலையை செய்தவர்கள், என் மீது குற்றஞ்சாட்டுகின்றனர்,” என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.


உத்தர பிரதேசத்தில் நடந்து வரும் கும்ப மேளாவில் பங்கேற்க, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் தினமும் சென்று வருகின்றனர். இதில் பிரபலமானவர்களும் அடங்குவர்.


இந்நிலையில், கர்நாடகாவை சேர்ந்த ஒருவர், தன் 'எக்ஸ்' பதிவில், நடிகர் பிரகாஷ் ராஜ், கும்பமேளாவில் குளிப்பது போன்றும், 'அவரின் அனைத்து பாவங்கள் மன்னிக்கப்பட்டு, விலகட்டும்' என பதிவிட்டிருந்தார்.

இது தொடர்பாக, மைசூரில் லட்சுமிபுரம் போலீசில், நேற்று பிரகாஷ்ராஜ் புகார் மனு அளித்தார். அதில், 'பிரசாந்த் சம்பர்கி என்பவர் வேண்டுமென்றே, என் புகழ், மரியாதையை அழிக்க, 'ஏஐ', தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, முகநுாலில் போலியான செய்தியை வெளியிட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார்.

பின், அவர் அளித்த பேட்டி:

பிரசாந்த் சம்பர்கி, எனக்கு மட்டுமல்ல, நடிகையர் உட்பட பலரையும் தொந்தரவு செய்துள்ளார். அவருக்கு பாடம் புகட்ட வேண்டும். அவ்வாறு செய்தால், போலி செய்தியை வெளியிடுவோருக்கு பாடமாக அமையும்.

ஒருவரின் அனுமதியின்றி அவரது படத்தை, சமூக வலைதளத்தில் வெளியிடுவதற்கு முன் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு பெறாமல் வெளியிடுவது குற்றம்.

கும்ப மேளாவில் புனித நீராடுவதில் என்ன தவறு இருக்கிறது? அது அவர்களின் நம்பிக்கை. நான், கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவன்; மனிதர்கள் மீது நம்பிக்கை வைப்பவன்.

கடவுள் இன்றி நீங்கள் வாழலாம்; மனிதர்கள் இன்றி வாழ முடியாது. அவர்களின் நம்பிக்கையை நான் கேள்வி கேட்கவில்லை. ஆனால் அதை அரசியலாக்கக் கூடாது.

மூட நம்பிக்கை



கும்பமேளா குறித்து காங்கிரசார் பேசினால், அது அவர்களின் மனநிலை. நான் யாரை பற்றியும் பேச விரும்பவில்லை.


யாருடைய நம்பிக்கையையும் அவமதிக்கவில்லை. என் மனைவியும், மகளும் கோவிலுக்கு செல்கின்றனர்; ஹோமம் செய்கின்றனர். ஆனால் ஒற்றுமையாக தான் இருக்கிறோம். மூடநம்பிக்கையை தான் எதிர்க்கிறேன்.


இதற்கு முன்னர், கிறிஸ்தவர்களை விட பெரிய 'மாபியா' வேறு எதுவும் இல்லை. முஸ்லிம்களிலும் பயங்கரவாதிகள் உள்ளனர். இதை யாரும் பெரிதுபடுத்தவில்லை. நான் எப்போதும் மதங்களுக்கு இடையே பிரிவினையை துாண்டும் வேலை செய்ததில்லை. இந்த வேலையை செய்தவர்கள், என் மீது குற்றஞ்சாட்டுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement